ஆயிரம் மடங்கு பலன் தரும் ஆயிரத்தம்மன்... பக்தர்களைக் காக்கும் அற்புத சக்தி!

பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயில், வேண்டுதல்களுக்கு ஆயிரம் மடங்கு பலன் அருளும் சக்தி வாய்ந்த அம்மன் திருத்தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

Jul 10, 2026 - 07:00
ஆயிரம் மடங்கு பலன் தரும் ஆயிரத்தம்மன்... பக்தர்களைக் காக்கும் அற்புத சக்தி!

நீங்கள் தெய்வத்தைக் கும்பிட் டால் அதற்கு உரிய பலன் நிச்சயம் கிடைக்கும் என்பது தெரிந்தவிஷயம்தான். அதுவே ஆயிரம் மடங்கு நற்பலன் கிடைக்கும் என்றால், உடனே அந்தக் கோயிலுக்குப் போகவேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா? 

திருநெல்வேலி பாளையங்கோட்டையின் மையப் பகுதியில்தான் அமைந்துள்ளது அப்படி ஒரு கோயில். சிறு கோயில்தான் என்றாலும் இங்கே வீற்றிருந்து அருள்பவள், ஆயிரத்தம்மன். ஆமாம், இந்த அம்மனுக்குப் பெயரே அதுதான். நினைத்ததை நிறைவேற்றி வைக்கும் வரப்பிரசாதி. ஆயிரத்தம்மனின் அருளுக்குச் சான்றாக, பிரிட்டிஷார் காலத்து நிஜ சம்பவம் ஒன்றும் உண்டு.

அக்காலத்தில் பாளையங்கோட் டையின் ஒரு பகுதியில் பட்டாளத்தினர் வசித்து வந்தனர். அந்தக் காலகட்டத்தில் திடீ ரென்று ஊர் முழுக்க கொள்ளை நோய் பரவியது. பிணிக்குப் பாகுபாடு எதுவும் உண்டா என்ன? அது பட்டாளத்தாரையும் விட்டு வைக்கவில்லை. நோய் தாக்கிய பயத்தில் மக்கள் அலறித் துடித்தனர். ஊரே கூடி என்ன செய்வதென்று யோசித்தனர். அப்போது, அப்பகுதியில் திடலில் ஓலை குடிசையில் வீற்றிருந்த அம்மனை பொங்கலிட்டு வழிபடுவது என்று முடிவு செய்தனர்.

ஊரே கூடிப் பொங்கலிட்டபோது, பட்டாளத்தாரும் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இதனால், அவர்களால் அன்றைய தினம் அணிவகுப்பில் கலந்துகொள்ள இயலவில்லை. அதனை அறிந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களை அழைத்துக் கடுமையாக விசாரித்தார். எல்லோரும் அம்மனைப்பற்றிச் சொல்ல, கோபம்கொண்ட அதிகாரி, கோயிலுக்கு வந்தார். அம்மனைப் பார்த்தார். "இத்தனை சிறிய உருவாக, சாதாரணமாக இருக்கும் இந்த அம்மனா உங்களைக் காப்பாற்றுவாள்? என்று கேட்டுவிட்டு, துப்பாக்கியால் அம்மன் சிலையைச் சரமாரியாகச் சுட்டார். சிலை குண்டுகள் பாய்ந்து பின்னமடைய, மக்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார்கள். அன்று இரவு தனது ஆட்டத்தைத் தொடங்கினாள், அம்மன்.

 ஆங்கிலேய அதிகாரி உட்பட அவனது குடும்பத்தினர் அனைவரையும் அம்மைநோய் தாக்கியது. வலியும் வேதனையும் தாங்காமல் தவித்தார்கள். உயிர் அச்சத்தில் நடுங்கினார்கள். அம்மன் சிலையைச் சுட்டதே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்த அதிகாரி, அம்மனிடம் மனதார மன்னிப்பு வேண்டினார். ஆச்சரியப்படும் விதமாக, அவர்கள் அனைவரும் நோயில் இருந்து விடுபட்டு, பூரண குணம் அடைந்தனர்.

ஆயிரக்கணக்கான பட்டாளத்து வீரர்களுடன் அந்த அதிகாரியும் கோயிலுக்கு வந்து அம்மனை ஆராதித்தார். ஆயிரக்கணக்கில் பட்டாளத்தார் வணங்கியதால் அந்த அம்மனுக்கு ஆயிரத்தம்மன் என்றே பெயர் வந்தது. அதன் பின்னர், கோயில் அமைக்கப்பட்ட சமயத்தில், துப்பாக்கி குண்டுகளால் பின்னப்பட்ட சிலையை மாற்றத் தீர்மானித்து, புதிய சிலை செய்தனர். அப்போது பக்தர் ஒருவர் கனவில் வந்தாள், ஆயிரத்தாள்.

"உன் தாய்க்கு உடற்குறை ஏற்பட்டால் நீ அவளை மாற்றி விடுவாயா? நான் இப்போது இருக்கும் இதே மாதிரியே காட்சியளிக்க விரும்புகிறேன்" என்று அம்மன் கூற, புதிதாக கட்டப்பட்ட கோயிலில் பின்னப்பட்ட சிலையையே பிரதிஷ்டை செய்தனர். பின்னர் சில காலம் கழித்து, தாயின் திருமேனியில் ஏற்பட்ட பின்னங்களில் உள்ள ஓட்டைகளை மருந்து கலவையை வைத்து மூடினர் என்பது வரலாறு. புதிதாகச் செய்யப்பட்ட சிலை, அருகே திரிபுரீஸ் வரர் என்ற திருப்பெயருடன் ஈசன் அருள்பாலிக்கும் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பாளையங்கோட்டையைச் சுற்றி உள்ள பதினொரு அம்மன்களுக்கும் இவள்தான் மூத்த சகோதரி. இன்றும் இவளுடைய கோயிலில் இருந்து அவள் சகோதரிகள் (மற்ற கோயில்களில் குடி கொண்டுள்ள அம்மன்கள்) எல்லோருக்கும் சேலை அனுப்புவது வழக்கமாக உள்ளது. நவராத்திரி முதல் நாளில் சகோதரிகள் பதினொருவரும் முன்னே செல்ல இவள் கடைசியாக வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதுவே இத்தலத்தின் தனிச்சிறப்பான விழா என்பதால், நவராத்திரி நாட்களில் பாளையங்கோட்டையே கோலாகலமாக இருக்கும் மைசூர் மற்றும் குலசேகரப்பட்டினத்திற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டை தசரா பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மைசூர் மற்றும் குலசேகரப்பட்டினத்திற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டை தசரா பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தசரா அன்று, ஆயிரத்தம்மன் மகிஷனை வதம் செய்த நிகழ்வு நடக்கும். அதைத் தொடர்ந்து பூம்பல்லக்கு ஊஞ்சல் சேவைகள் நடக்கும். அன்று மட்டுமல்ல, என்று இங்கே வந்து வணங்கினாலும் ஆயிரம் ஆயிரமாக நற்பலன்களை அள்ளித்தருவாள் ஆயிரத்தாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow