திருநெல்வேலி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாமன்றக் கூட்டத்தில், திமுகவிலிருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையும் பங்கேற்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அல்லா பிச்சை, தோளில் தவெக துண்டை அணிந்தபடியும், விசில் அடித்தபடியும் வந்தது திமுக மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இனிமேல் விசில் அடிக்கக்கூடாது என மேயர் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்த நிலையிலும், மேயரின் எச்சரிக்கையை மீறி கவுன்சிலர் அல்லா பிச்சை மேலும் இரு முறை விசில் அடித்ததாகக் கூறப்படுகிறது.
உறுப்பினர்கள் கூட்டத்தை கட்சிக் கூட்டம் போல் மாற்றாதீர்கள் என்றும், மன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் மீண்டும் அவர் அதனை செய்ததால் அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதனால் திமுக மற்றும் தவெக தரப்பினர்களுக்கு மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தவெக உறுப்பினர் வைத்திருந்த விசிலை திமுக உறுப்பினர்கள் பிடுங்க முயன்றதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீண்டும் மீண்டும் விசில் அடித்ததால் மாமன்றக் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
மாமன்றக் கூட்டத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, அவரைக் கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, மாமன்றக் கூட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார். அதன்படி, மாமன்ற விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் மாமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தடை விதித்து மேயர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.