பிரதமர் ரேஸில் விஜய்... மறுப்பு தெரிவிக்காத அமைச்சர்கள்.. காங்கிரஸை கழட்டிவிடுகிறதா தவெக?

தமிழ்நாட்டு அரசியலில் விஜய்யின் அரசியல் என்ட்ரி ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் அடங்காத நிலையில், தற்போது அடுத்த விவாதம் ‘விஜய் பிரதமர் வேட்பாளரா?’ என்பதுதான்!

Sep 5, 2026 - 13:00
பிரதமர் ரேஸில் விஜய்... மறுப்பு தெரிவிக்காத அமைச்சர்கள்.. காங்கிரஸை கழட்டிவிடுகிறதா தவெக?

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ ஒருவர் நாட்டின் பிரதமராக உருவாக வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தப் பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, தவெகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள், விஜய்தான் எதிர்கால பிரதமர் என்ற ரீதியில் வெளிப்படையாக கருத்துகளைத் தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனால், விஜய்யின் அரசியல் பயணம் தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அரசியலை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வியும் எழுந்தது.

பிரதமர் ரேஸில் விஜய்?

இந்த விவாதம் அரசியல் மேடைகளோடு நின்றுவிடவில்லை. இண்டியா டுடே - சி-வோட்டர் இணைந்து நடத்திய ‘Mood of the Nation’ கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்களும் இந்த விவகாரத்திற்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தின.

அதில், நாட்டின் அடுத்த பிரதமருக்கான விருப்பத் தேர்வில் விஜய்க்கு 9.2 சதவீத ஆதரவு கிடைத்து மூன்றாவது இடம் கிடைத்ததாக செய்திகள் வெளியாகின. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் விஜய் இருப்பதாக அந்தத் தகவல்கள் கூறின.

இதற்கிடையே 2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து, தவெக எம்.எல்.ஏ கனிமொழி சதீஷ் தெரிவித்த ஒரு கருத்தும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. விஜயை ராகுல் காந்தி பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என அவர் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கொடுத்த பதிலடி!

பிரதமர் வேட்பாளராக விஜய் முன்னிறுத்தப்பட்டால், தவெக உடனான கூட்டணியில் இருந்து விலக தயார் என்றும், அமைச்சரவையில் இருந்தும் விலகத் தயார் என்றும் ராஜேஷ் குமார் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ கனிமொழி சதீஷின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலளித்தார். ஜோதிடர்கள் கூறும் கணிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்றும், அந்தக் கருத்துகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் மாணிக்கம் தாகூர் கூறினார். இதனால், ‘விஜய் பிரதமர்’ என்ற பேச்சு தவெக-காங்கிரஸ் இடையேயான அரசியல் விவாதத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியது.

அமைச்சர்களிடம் கேள்வி... பதில் என்ன?

இந்த சூழலில், விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி தமிழ்நாடு அமைச்சர்களிடமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, ‘பிரதமர் விஜய்’ என்பது ஊடகங்களில் பேசப்படும் விஷயம் மட்டுமே என்ற வகையில் பதிலளித்தார். பிரதமர் வேட்பாளர் குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் இதே கேள்வி முன்வைக்கப்பட்டபோது, “என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்” என்று கூறியபடியே அவர் அங்கிருந்து நகர்ந்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமும் விஜய்யின் பிரதமர் வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்காமல் புன்னகைத்தபடியே கடந்து சென்றார். 

மௌனம்... அதுவே அரசியல் பதிலா?

ஒருபக்கம் தவெக எம்.எல்.ஏக்கள், விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம், காங்கிரஸ் தரப்பு அதனை விமர்சித்து வருகிறது. ஆனால், அமைச்சர்கள் தரப்பில் இருந்து இந்த விவகாரத்தில் வெளிப்படையான மறுப்பும் வரவில்லை,  உறுதியான ஆதரவும் தெரிவிக்கப்படவில்லை. கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களே வெளியாகி வருகின்றன.

இதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் அடுத்த கேள்வியை எழுப்பியுள்ளது. விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் தவெகவிடம் உண்மையிலேயே இருக்கிறதா? அல்லது 2026 தமிழ்நாடு அரசியலைத் தாண்டி, தேசிய அரசியலுக்கான மாஸ்டர் பிளானா இது? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன. 

ஒருவேளை, அமைச்சர்கள் மௌனம் விஜய்யின் பிரதமர் கனவுக்கு வழிவகுக்கும் பட்சத்தில், தவெக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுமா? அல்லது பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow