புண்ணிய பலன் அதிகம் தரும் புருஷோத்தமர் மாதம்!
சித்திரை முதல் பங்குனிவரை தமிழ்மாதம், ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆங்கில மாதம் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவைதான். புருஷோத்தமர் மாதம் என்றால் தெரியுமா? அது என்ன என்று கேட்கிறீர்கள்தானே?
சூரிய ஆண்டு 365 நாள்கள் மற்றும் சுமார் 6 மணி நேரங்களைக் கொண்டது (ஒரு வருடத்திற்கு முன்னூற்று அறுபத்தைந்தே கால் நாள்கள் என்று பாடத்தில் படித்தது நினைவிருக்கிறதா?) அதேசமயம் சந்திர ஆண்டு 354 நாட்களைக் கொண்டது. இதனால் சந்திர மற்றும் சூரிய ஆண்டுகளுக்கு இடையில் 11 நாட்கள், 1 மணிநேரம், 31 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகள் இடைவெளி ஏற்படுகிறது. இந்த இடைவெளி ஒவ்வொரு ஆண்டும் கூடும்போது, அது தோராயமாக 2.7 ஆண்டுகளில் ஒரு மாதமாகிறது.
சந்திரமான மாதங்களில் சராசரியாக ஒவ்வொரு 32.5 மாதங்களுக்கும் ஒரு கூடுதல் மாதம், அல்லது அதிக மாதம் சேர்க்கப்படுகிறது. அதிக மாதம் எனக் குறிப்பிடப்படும் இம்மாதத்தில் சுபகாரியங்களை நடத்துவதில்லை. முன்னோர் காலத்தில் மதக்கடமைகளைப் புறக்கணித்தவர்கள், மீண்டும் அவற்றைப் பின்பற்றத் தொடங்கிட உகந்த மாதமாக இது கருதப்படுகிறது. இந்த மாதத்தைத்தான், பரந்தாமன் ஏற்றுகொள்வதாக ஐதிகம். பகவான் விஷ்ணுவுக்கும் கிருஷ்ணருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட மாதமாதலால் புருஷோத்தமர் மாதம் என்று இம்மாதத்தைச் சொல்வர்.
இந்த 2026 அதிக மாத ஆண்டு!
வட இந்திய நாள் காட்டிகளில் இந்த ஜியேஷ்தா மாதம் மே 17 முதல் ஜூலை 13 வரை நீளுகிறது. மே 15 முதல் ஜூன் 15 வரை வரும் நாட்கள் அதிக ஜியேஷ்தா எனவும், ஜூன் 16 முதல் ஜூலை 13 வரும் வரை நாட்கள் நிஜ ஜியேஷ்தா எனவும் அழைக்கப்படுகின்றன.
ஸ்கந்த மற்றும் பத்ம புராணங்களின்படி விஷ்ணு பகவான் இந்த அதிக மாதத்தைத் தனதாக அறிவித்துக்கொண்டார். புருஷோத் தமர் மாதம் என அழைக்கப்படும் இந்த மாதத்தில் விரதமிருந்து பக்தர்கள் அர்ப்பணிக்கும் சேவைகள், மற்ற நாட்களை விட அதிக பலன்களைத் தர வல்லன.
புஷ்டி மார்கம் என்ற அமைப்பை நிறுவிய ஸ்ரீவல்லபாச்சாரியார் இதனை கருத்தில் கொண்டிருக்கிறார். புஷ்டி என்பதற்கு ஊட்டச் சத்து என்ற பொருள் இருந்தாலும் இந்த இடத்தில் இறை அருள் அல்லது பரந்தாமனின் அருள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இறைவனின் அந்த அருளைப் பெற பின்பற்றப்படும் வழி முறைகளே புஷ்டி மார்கம்.
அதன்படி பொதுவாக நடத்தப்படும் அன்னதானம், தீப தானம், பகவத் கீதை பாராயணம், ஏகாதசி விரதம், போன்றவை அதிக மாத நாள்களில் பக்தர்களின் சேவைகளாக இடைவிடாமல் நடத்தப்படுகின்றன.
இந்த அதிக மாத சேவைகளுடன் புருஷோத்தமரை நித்தம் தரிசனம் செய்வதும் பக்தர்களுக்குக் கடமையாகிறது. இவை ராஜஸ்தானின் 'நாத் த்வாரா' என்ற இடத்தில் உள்ள ஸ்ரீநாத் ஆலயத்தில் கோலாகாலமாக நடத்தப்படுகின்றன.
நாத் என்ற சொல், இங்கு ஸ்ரீநாத் என்ற பரந்தாமன் கிருஷ்ணரைக் குறிப்பிடுகிறது. த்வாரா என்பதற்கு நுழைவாயில் என்று பொருள்!. அதாவது கடவுளின் நுழைவாயில், ஸ்ரீநாத்ஜி என்று கிருஷ்ணர் மரியாதையுடனேயே அழைக்கப்படுகிறார்.
நாத் த்வாராவில் உள்ள கிருஷ்ணர் விக்கிரகம் ஸ்வயம்பூ. அதாவது தானாகத் தோன்றியது. கோவர்தன மலையில் தனது இடது கரத்தை உயர்த்திய வண்ணம் இருந்த இந்த விக்கிரகத்தை கிபி 1466இல் பிரஜ் வாசிகள் கண்டுபிடித்தார்கள். மேயச் சென்ற பசு ஒன்று தானாகவே பால் சுரந்த இடத்தில் இருந்து கிடைத்தது அந்த விக்ரஹம்.
விக்கிரகத்தின் புனிதம் கெடாமல் இருக்க பிரஜ் வாசிகள் சுமார் 69 வருடம் விக்கிரகத்தை அதே நிலையில் கோவர்த்தன கிரியில் வெறும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டிருக்கிறார்கள். அந்நியப் படையெடுப்புகளின் காரணமாக விக்கிரகம் முதலில் மதுராவிலிருந்து பின்னர் ஆக்ராவிற்கு மாற்றப்பட்டிருக்கிறது. கிபி 1672ம் ஆண்டு ஆக்ராவிலிருந்து நகர்த்தப்பட்டது. அப்போது. சக்பூர் என்ற இடத்தில் விக்கிரகத்தைச் சுமந்து வந்த ரதம் மேலும் நகர மறுக்க, ஸ்ரீநாத்ஜி குடிகொள்ள விரும்பும் இடமே அதுவே என அறிந்த மக்கள் அவருக்கு அங்கேயே ஆலயத்தையும் நிறுவினர். பிற்காலத்தில் அந்த இடமே நாத் த்வாரா என அழைக்கப்படலானது.
ராஜஸ்தானில் உள்ள உதய்பூரிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் ஆரவல்லி மலைத்தொடரின் மடியில் நாத் த்வாரா அமைந்திருக்கிறது. பாலகோபால் எனவும் அழைக்கப்படும் ஸ்ரீநாத் இங்கு அவரது தாய் யசோதை அவரை சீராட்டிய குழந்தைப் பருவ நிகழ்சிகளை ஒட்டியே வழிபடப்படுகிறார்.
பணாஸ் என்கின்ற நதி, நாத் -த்வாராவைத் தொட்டுச் செல்கிறது. ஆலயம் வெண் சலவைக் கற் களால் ஆன மாளிகையைப் போலிருப்பதால், நந்த பவன் என்றே அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் புருஷோத் தமர் பாலகோபாலைத் தவிர ராதா - கிருஷ்ணர், கருடன், லலிதா-பாலகிருஷ்ணர் சன்னதிகளும் உண்டு!
நாத் த்வாராவிலிருந்த ஸ்ரீநாத், சித்தோர்கர் நகர் சென்று மீராவுடன் சில நாள்கள் கழித்ததாகச் சொல்லப்படும் புராண சரிதங்களும் இங்கு உண்டு!
நாத் த்வாராவில் ஸ்ரீகிருஷ்ணர் வழிபாடு வினோதமான முறையில் நடைபெறுகிறது. பக்தர்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற நேரங்கள் பாலகிருஷ்ணனுக்கு விளையாடவும் உண்ணவும் ஓய்வு எடுக்கவும் ஒதுக்கப்படுகின்றன. அன்னை யசோதா கண்ணனை வளர்த்த அதே முறையில் இங்கு அந்த பால கோபாலனுக்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. துயில் எழுவது முதல் மீண்டும் உறங்கச் செல்வது வரையான ஒவ்வொரு கட்டத்திலுமாக. ஸ்ரீநாத்ஜி, ஒரு நாளில் 8 முறை வெவ்வேறு வடிவில் தரிசனம் தருகிறார்.
புருஷோத்தமர் மாதத்தில் ஸ்ரீநாத் ஜியை தரிசிப்பது.. ஏன், அவரைப்பற்றி நினைப்பதுமே கூட பலமடங்கு அதிக நற்பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. அந்த பாக்யத்தினை பகவான் கிருஷ்ணர், உங்களுக்கும் அருளட்டும்.
எங்கே இருக்கு?
உதய்பூர் விமான நிலையம் நாத்த்வாரா சிற்றூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. உதய்பூர் இருப்புப்பாதை நிலையம் நாத்த்வாராவிலிருந்து சுமார் 43 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து சாலை வழியாக நாத்த்வாராவை அடைவது சுலபம்.
தரிசன நேரம்:
5.30 - 10. மதியம் 12.00 முதல் 4 மணி வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.
What's Your Reaction?













