1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து "டாக்டர் வெடிகுண்டு" அப்துல் கரீம் துண்டா விடுவிப்பு...
1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த டாக்டர் வெடிகுண்டு என அழைக்கப்படும் அப்துல் கரீம் துண்டாவை ராஜஸ்தான் நீதிமன்றம் விடுவித்தது.
1993ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட முதலாமாண்டு நினைவு தினத்தில் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில், 257 பேர் கொல்லப்பட்டனர். அப்போது கோட்டா, கான்பூர், செகந்த்ராபாத் வழியாகச் சென்ற ரயில்களில் குண்டுவைத்து 2 பேர் உயிரிழந்த வழக்கில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் கரீம் துண்டா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து 1996 குண்டுவெடிப்பு வழக்கிலும் தேடப்பட்டு வந்த அவர், 2013ம் ஆண்டு உத்தரகாண்டில் இந்தியா - நேபாள எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து 1996 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் உரிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி 1993 வழக்கில் இருந்து அவரை விடுவித்த ராஜஸ்தான் சிறப்பு நீதிமன்றம், வழக்கு தொடர்பாக அமினுதீன், இர்ஃபான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் CBI மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தச்சராக வேலைபார்த்து, பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தால் கோவமடைந்து லஷ்கர் இ தொய்பாவில் இணைந்த அப்துல் கரீம் துண்டா, பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு டாக்டர் வெடிகுண்டு என அழைக்கப்பட்டார். வெடிகுண்டு தயாரிப்பின்போது தனது இடது கையை அவர் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?