பரமக்குடி டூ மகாராஷ்டிரா- ரியல் ’தீரன்’ சம்பவம்...மகாராஷ்டிராவில் கொள்ளையனை தூக்கிய போலீஸ்
மகாராஷ்டிராவுக்கு சென்று கொள்ளையனை பிடித்த தனிப்படை போலீஸாருக்கு அதிகாரிகள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்
6 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொள்ளை சம்பத்தில் தொடர்புடைய குற்றவாளியைத் தமிழக போலீஸார் மகாராஷ்டிரா வரை சென்று கைது செய்துள்ளது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர்.
வடஇந்தியாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் நோக்கி வேலை தேடி வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு அப்படி ஒரு நபராக தமிழகம் வந்தவன் தான் அணிக்கேட் ராம்பிரோஸ். ஆனால், இவன் வந்தது வேலை செய்ய அல்ல, கொள்ளையடிக்க. ராமநாதபுரம் பரமக்குடிக்கு சென்ற ராம்பிரோஸ், கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தான். வேலை நேரம் போக கொள்ளைக்கான திட்டத்தையும் தீட்டி வந்துள்ளான்.
இந்நிலையில், தான் பணியாற்றும் பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணவேணி என்ற ஓய்வு பெற்ற அரசு மருத்துவரின் வீட்டை நோட்டமிட்டுக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டான். அவன் காத்திருந்தது போலவே, மருத்துவர் கிருஷ்ணவேணி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த ராம்பிரேஸ், அவரின் கை கால்களைக் கட்டிப் போட்டு வீட்டிலிருந்த 37 சவரன் நகை மற்றும் 12 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் திருடிச் சென்றான்.
இதுகுறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பரமக்குடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால், 6 ஆண்டுகளாகக் கொள்ளையன் குறித்த எந்த துப்பும் கிடைக்காத நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் சேகரிப்பட்ட கைரேகைகளை வைத்து போலீஸார், ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அதில், கொள்ளையன் ராம்பிரேஸின் ஜாதகமே போலீஸ் கையில் கிடைத்தது.
இதையடுத்து, தீரன் படப் பாணியில் தனிப்படை போலீஸார் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் புறப்பட்டனர். அங்கு அவுரங்காபாத் பகுதி காவலர்கள் உதவியுடன் ஒரு வாரக் காலம் தங்கித் தேடினர். நீண்ட தேடுதல் வேட்டையில் ராம்பிரோஸ் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அவனைச் சுற்றி வளைத்துப் பிடித்து, அங்கிருந்து கார் மூலம் பரமக்குடிக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் பரமக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் அணிக்கேட் ராம்பிரோஸை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மகாராஷ்டிராவுக்கு சென்று கொள்ளையனை பிடித்த தனிப்படை போலீஸாருக்கு அதிகாரிகள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 3 குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?