காவலர்கள் தாக்கியதால் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்... இறுதிச்சடங்கு நடத்த உறவினர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை...

Mar 25, 2024 - 14:11
காவலர்கள் தாக்கியதால் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்... இறுதிச்சடங்கு நடத்த உறவினர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை...

தென்காசியில், கடந்த 8ம் தேதி காவலலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநரின் உடலுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது. 

தென்காசி மாவட்டம் வடக்குப்புதூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநரான முருகன் கடந்த 8ஆம் தேதி முப்பிடாதியம்மன் கோயில் அருகே சென்றபோது, ஆட்டோ மீது வேன் மோதியது. அப்போது அங்கு போக்குவரத்து பணியில் இருந்த காவலர்கள் முருகனை தாக்கியதில், மயக்கமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் முருகனின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டுநர் முருகனின் மனைவி மீனா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், மார்ச் 9ம் தேதி உடற்கூறாய்வு நடைபெற்றது. ஆனால் இதுவரை உடற்கூறாய்வு அறிக்கையை குடும்பத்தினருக்கு கொடுக்க மறுப்பதாகவும் இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தங்கள் தரப்பு மருத்துவர்கள் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு நடைபெற வேண்டும் எனவும் காவலர்கள் தாக்கி உயிரிழந்த தங்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், முருகன் மரணம் சம்பந்தமாக இதுவரை 45 சாட்சிகள்  விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும் இறந்தவரின் மனைவி மீனா, நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியிடம் நேரில் தனது வாக்குமூலத்தை தெரிவித்தார். மேலும் மூன்று சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். இதனை பதிவு செய்த நீதிபதி, இறந்து போனவரின் உடலை இன்று (மார்ச் 25) மாலை 4 மணிக்குள் உறவினர்கள் பெற்று இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதுடன், வழக்கின் விரிவான உத்தரவு மாலை 4 மணிக்கு பிறப்பிக்கப்படும் எனவும் கூறி ஒத்திவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow