சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து- நோயாளிகள் வெளியேற்றம்

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்டுப் பணிகள் துறை வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

Nov 22, 2023 - 11:56
Nov 22, 2023 - 14:00
சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து- நோயாளிகள் வெளியேற்றம்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தின் மையப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் தீவிர பாதிப்புடைய நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பதால் பல்வேறு நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் முதல் மாடியில் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள ஏசியில் மின் பசிவு காரணமாக இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த பொருட்கள் முற்றிலும் இருந்து நாசமானது.

தீ விபத்தினால் நோயாளியின் உறவினர்கள் மற்றும் நோயாளிகள் பதற்றத்துடன் வெளியேறி  மருத்துவமனையை சூழ்ந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்டுப் பணிகள் துறை வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அங்கு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயினை போராடி அணைத்தனர்.இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.கரும்புகையின் காரணமாக நோயாளிகளுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டதால் கட்டடத்தில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்து காற்றோட்டத்திற்கு வழி செய்தனர்.

மேலும் சிகிச்சை பெற்று வந்த உள் நோயாளிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து மருத்துவமனை டீன் மணி மற்றும் மருத்துவர்கள் அப்பகுதியில் பார்வையிட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சிகிச்சை முறை குறித்து நேற்று ஆய்வு செய்தார்.அதற்குள் இப்படி ஒரு சம்பவம் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பேசினோம். 'ஏசிக்கு போற லைனில் கோளாறு ஏற்பட்டு மின்கசிவு வந்திருக்கிறது.அதுதான் தீ விபத்துக்கு காரணம். மொத்த லைனையும் செக் செய்யும் பணி நடக்கிறது.' என்றார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow