திருச்சி கிழக்கில் களமிறங்கும் வடிவேலு? திமுகவின் பிளான் வொர்க் அவுட்டாகுமா?
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தரப்பில் நடிகர் வடிவேலு களமிறக்கப்பட பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அறிவாலய வட்டாரத்தில் இருந்து தகவல் லீக்காகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட்ட விஜய், இரண்டு தொகுதியிலுமே வெற்றி பெற்றார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், தனது திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் தொகுதியை தனகத்தே வைத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட போவது யார் என்று ஒருபக்கம் எதிர்பார்க்கப்பட்டாலும், திமுக, அதிமுக கட்சிகள் இடைத்தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையைப் போன்று திருச்சியும் திமுகவின் கோட்டை என்றே சொல்லவேண்டும். அத்தகைய தொகுதியை திமுக இழந்தது, உடன்பிறப்புகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இத்தகையச் சூழலில், இடைத்தேர்தலில் திமுக மீண்டு வருமா? யாரை வேட்பாளராக களமிறக்கப்போகிறது? தவெக வேட்பாளருக்கு டஃப் கொடுக்குமா? அல்லது இடைத்தேர்தல் போட்டியே இல்லை என்று அறிவிக்குமா? போன்ற பல்வேறு கேள்விகள் அறிவாலயத்தை சுற்றி வருகின்றன.
இந்த நிலையில், திமுக தரப்பில் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகர் வடிவேலுவை களம் இறக்க முனைப்புக் காட்டுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, காமெடி நடிகர் வடிவேலுவை திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க தி.மு.க. தரப்பு பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறது. அவர் ராசியில்லாதவர் என கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமை ஒதுக்கி வைத்ததால், நடிகர் வருத்தத்தில் இருந்ததாக்க் கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்தும் வகையிலேயே இடைத்தேர்தல் வேட்பாளர் என ஆசை காட்டுகிறது அறிவாலயம் என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
ஆனால், திருச்சி கிழக்கு உடன்பிறப்புகளோ, மீண்டும் இனிகோ இருதயராஜையே நிறுத்துங்கள் என்ற கோரிக்கையை வைத்து வருவதாக கூறப்படுகிறது. காரணம், வடிவேலு மீது விஜயகாந்த் விஷயத்தில் இருந்தே நெகட்டிவிட்டி இருப்பதால், அவரை வேட்பாளராக நிறுத்துவதே விஜய்க்கு சாதகமாக மாறிவிடும். ஆதலால், இனிகோ இருதயராஜே சிறந்த தேர்வாக இருப்பார் அல்லது அன்பில் மகேஷை நிறுத்துங்கள் என்றும் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
What's Your Reaction?

