தவெகவுக்கு டஃப்... அதிகரிக்கும் மா.செ. பதவி!

தவெகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், திமுக தற்போது கம்பேக் கொடுப்பதில் மும்முரம் காட்டி வரும் நிலையில் இன்று நடந்த செயற்குழு கூட்டம் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Aug 22, 2026 - 15:03
தவெகவுக்கு டஃப்... அதிகரிக்கும் மா.செ. பதவி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு திமுகவில் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கட்சியின் அமைப்பை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

தொகுதி வாரியாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 38 குழுக்கள் தங்களது அறிக்கைகளை சமர்ப்பித்த நிலையில், அவற்றை ஆய்வு செய்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தங்கம் தென்னரசு தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் தனது அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் நிர்வாக மறுசீரமைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது திமுகவில் 77 மாவட்டக் கழகங்கள் உள்ள நிலையில், இனி அவற்றின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பல்வேறு கட்சிப் பதவிகளுக்கு வயது வரம்பும், ஒருவர் ஒரே பதவியில் தொடரக்கூடிய முறைமையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது 70 என்றும், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பதவியில் இருக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை உயர்வுக்கான காரணம் என்னவென்றால் தேர்தலுக்கு முன்பு சில தொகுதிகளில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மக்கள் பணியிலும்,கட்சி பணிகளிலும் அலட்சியப்போக்குடன் இருந்ததால் இந்த அதிரடி முடிவுக்கு வழிவகுத்துள்ளது. 

இந்நிலையில் தவெகவுக்கு போட்டியாக திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ள நிலையில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருவது இதன் மூலம் தெள்ள தெளிவாகிறது. ஏற்கனவே தவெக 120 மாவட்டச் செயலாளர்களை வைத்துள்ள நிலையில்  தற்போது அதற்கு டஃப் கொடுக்கும் வகையில் திமுக 110 ஆக உயர்த்தி அரசியல் களத்தில் கம்பேக் கொடுப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட பின்னடைவுகளை சரிசெய்து, இளம் தலைமுறையினரை முன்னிறுத்தி கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக திமுகவின் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow