Mandadi Movie Review : கரையில் கில்லாடி, கடலில் தள்ளாடி!
சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி இருக்கிறது? படகுப் போட்டி, ஆக்ஷன், காதல், வன்முறை என படம் சொல்லும் கதை என்ன? முழு விமர்சனம் விரிவாக பார்போமா?
காமெடி நடிகராக திரைப் பயணத்தைத் தொடங்கி, கதைநாயகனாகப் பரிணமித்துள்ள நடிகர் சூரியின் வளர்ச்சி அசாத்தியமானது. 'விடுதலை', 'கருடன்', 'கொட்டுக்காளி', 'மாமன்' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுப்பது மட்டுமின்றி, தனது கதைத் தேர்விலும் வியக்க வைக்கிறார். அந்த வரிசையில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்த்திராத பாரம்பரியப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'மண்டாடி' திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மீனவ கிராமத்தில் நடக்கும் படகு போட்டி... அதில் ஜெயித்தால் கெத்து இல்லன்னா வெத்துன்னு, ஒரே ஊருக்குள்ள ரெண்டு கோஷ்டி முட்டி மோதி வெட்டிக்கொள்ள, வழக்கம் போல ஹீரோ குரூப் ஜெயிக்கிறது. இதுதான் கதை... இதுக்கு இத்தனை கோடி செலவா?
சின்ன மீனவ கிராமம், அங்கே நண்பர்களாக இருந்த ரெண்டு பேர் எதிரிகளாக மாறியது.... அதற்கு காரணமான குருபக்தி, லவ், சென்டிமெண்ட், குல கௌரவம், துரோகம்னு வழக்கமான டிராமாவுக்குள் ஆக்ஷனை கொஞ்சம் அதிகப்படியாக திணித்ததால் படகு போட்டி பாக்கு வெத்திலை மாதிரி ஆகிவிட்டது.
ஹீரோ சூரி சென்னையில் ஒரு தீம் பார்க்கில் வாட்டர் கேம் செக்யூரிட்டி. ஆனால், ‘ அதற்கு முன் அவர் யார் என்று தெரியுமா?’ன்னு கதை ஆரம்பிக்குது... பரோட்டா சூரி, ‘பாட்ஷா’ ஆக வேண்டாமா? நல்லவேளை பாம்பே, கோவா, ஃபாரின், கடத்தல், கன்டெய்னர், ஹார்பர்னு போகாமல் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி கதையை முகவை பக்கம் திருப்பியது நிம்மதி...
சூரியின் காதலியாக வரும் மஹிமா நம்பியார், அவரது அப்பா சத்யராஜ் அசத்துகின்றனர், சுஹா வழக்கமான வில்லன். மிதுன், ரவீந்திர விஜய் பரவாயில்லை. குரலை தாழ்த்திக் கொள்வது இல்லை உசத்துவது, இதுதான் சூரியின் நடிப்பு. செய்யாத தப்புக்கு அவர் தன் காதலியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது மட்டும் விதிவிலக்கு... மீனவ மக்களின் உடல் மொழி படத்தில் ஒருவருக்கும் இல்லை, சூரி உட்பட...
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிருக்கு கடலும் படகும் கட்டுப்படவில்லை. எடிட்டிங்கும் படகு போட்டியின் ஒரு நிஜமான அனுபவத்தை ஏற்படுத்த தவறிவிட்டது. ஜீ.வி.பி.யின் இசை சுமார் ரகம். வாட்டர் வேர்ல்ட், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ரேஞ்சுக்கு பில்டப் குடுத்தவர்கள் கடைசியில் அறுபதுகளில் வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ உயரத்தை கூட எட்டவில்லை என்பதுதான் உண்மை.
படம் முழுக்க படகு போட்டி தான் என்றாலும் கட்சிகளில் வியக்கும்படி ஏதும் இல்லை. காரணம் இயக்குநருக்கு வத்தல், படகு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வத்தல் என்பது மினி கப்பல், சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே அது பயன்படுத்தப்படும். அதுகூட பரவாயில்லை...
ஆனால், கடலோர கிராமங்களின் உண்மையான பிரச்னைகள் ஒன்றுகூட தெரியாததால் தங்களுக்கு தெரிந்ததை பிரச்னையாக்கி, அதற்குள் வன்முறையை வண்டி வண்டியாய் இறக்கியிருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் அனைத்தையும் குருதி ஆட்டமாக மாற்றுவதுதான் கோலிவுட் பிரம்மாக்களின் லட்சியம் சாதனை.
ஒரு மாஃபியா கலாச்சாரத்தை மக்கள் கலாச்சாரமாக மாற்ற கோலிவுட்டில் மணிரதனம் தலைமையில் ஒரு கும்பல் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கிரது. அதில் தன்னை புதிதாக இணைத்துக் கொண்டிருக்கிறார் மதிமாறன் புகழேந்தி.
இவர்களுக்கு காதலில் ஆரம்பித்து விளையாட்டு வரை எல்லாமே வன்முறையில் இருந்து தான் பிறக்கும்... இனி பல் இல்லாத இரண்டு பாட்டி பல்லாங்குழி விளையாட, அது 200 கொலையில் எப்படி முடிந்தது? என்று பாட்டிகள் தலைகளை வெட்டி சிதறவிட்ட கதைகளையும் சொல்வார்கள்...
மண்டாடி - கரையில் கில்லாடி, கடலில் தள்ளாடி...
(இளையரவி)
What's Your Reaction?