“முஞ்சுல முழிக்காத!” – உதயநிதி – அன்பில் மகேஸ் நட்பு முடிவுக்கு வந்துவிட்டதா?

உதயநிதி ஸ்டாலின் – அன்பில் மகேஸ் இடையேயான நீண்டகால நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Aug 12, 2026 - 20:00
Aug 12, 2026 - 20:05
“முஞ்சுல முழிக்காத!” – உதயநிதி – அன்பில் மகேஸ் நட்பு முடிவுக்கு வந்துவிட்டதா?

மூன்று தலைமுறை நட்பு கிட்டத்தட்ட முகத்தில் விழித்துக்கொள்ள முடியாத அளவுக்கு முறிந்திருக்கிறது. எப்பேர்பட்ட உறவையும் சுக்குநூறாக்கிவிடும் அதிகாரம் எனும் மாயை, தலைமுறைகளைக் கடந்த உதயநிதி - அன்பில் மகேஸ் நட்பையும் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பில் மகேஸ் த.வெ.க. ஸ்லீப்பர் செல்லாகவே மாறிவிட்டார் என்று சொல்லப்படுவதுதான் உடன்பிறப்புகளையே அதிர்ச்சியில் உறையவைக்கும் ஹாட் நியூஸ்!

இதுகுறித்த உள்விவரங்களை அறிந்த தி.மு.க. சீனியர் ஒருவரிடம் பேசினோம். “நகமும் சதையுமாக இருந்துவந்த உதயநிதியையும் மகேஸையும் சமீபகாலமாக சேர்ந்தாற்போல பார்க்க முடியவில்லை. இவர்கள் நட்பு இன்றோ, நேற்றோ முளைத்தது அல்ல. கருணாநிதியின் நெருக்கமான நண்பர் அன்பில் தர்மலிங்கம். இவரின் மகன் பொய்யாமொழியும், ஸ்டாலினும் பால்ய நண்பர்கள். பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஸும் உதயநிதியும் நெருக்கமான நட்புகொண்டிருந்தார்கள். அந்த நட்பின் அடிப்படையில்தான், உதயநிதி சினிமாவுக்கு வந்தபோது அவருக்கு அகில இந்திய அளவில் ரசிகர் மன்றம் அமைத்து அதன் தலைவராக இயங்கிவந்தார் அன்பில் மகேஸ்.

இந்த நிலையில், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சரானார் அன்பில் மகேஸ். கூடவே, திருச்சி மாவட்டத்தில், சீனியர் அமைச்சர் நேருவுக்கு டஃப் கொடுக்கும் பவர்ஃபுல் மாவட்டச் செயலாளராகவும் வலம்வந்தார். தவிர, அனைத்து அமைச்சர்களையும் தீவிரமாக கண்காணித்து வந்த அன்றைய முதல்வர் ஸ்டாலின், அன்பில் மகேஸை மட்டும் கண்டுகொள்ளவில்லை.

இதையெல்லாம் அன்பில் மகேஸ், தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் என சொல்லப்படுகிறது. தன் பணிகளைக் கவனிக்க கார்த்திக், அருள் முருகன், பிரகாஷ், உமா சங்கர், முத்துக்குமார், தீபக், ராஜா தமிழ் மாறன் என ஏழு உதவியாளர்களை வைத்திருந்தார் மகேஸ். இவர்களில் மகேஸின் சொந்த சகோதரி மகனான, கார்த்திக்குக்கு முதலிடம். இவர்கள் இல்லாமல், ஸ்வீட் பாக்ஸுகளை கொண்டுவந்து சேர்க்க ஏழு மீடியேட்டர்களையும் நியமித்திருந்தார்.

அவர்களில் ஒருவரான பி.டி.அரசக்குமார்தான்தற்போது அவருக்கே வில்லனாக மாறியிருக்கிறார். தனியார் பள்ளிகள் சங்கத்தை நடத்தி வந்த அரசக்குமார், பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் பணி மாறுதல், பள்ளிகள் தொடங்க அனுமதி போன்ற பல பணிகளில் லாபி செய்துவந்தார். இதற்கான ஸ்வீட் பாக்ஸுகளையும் அள்ளினார். இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்படவே வம்பில் சிக்க ஆரம்பித்தார் அரசக்குமார்.

கடந்த ஜூன் 27ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அரசக்குமாரை கைது செய்தனர். விசாரணையின்போது அரசக்குமார், அன்பில் மகேஸுக்கு எதிராக பல விஷயங்களை கக்கிவிட்டார் என கூறப்படுகிறது. சட்டவல்லுநர்களும், அன்பில் மகேஸ் தரப்பினருக்கு சம்மன் அனுப்பலாம், தேவைப்பட்டால் கைதும் செய்யலாம் என சொல்ல ஆடிப்போனார் மகேஸ். இதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள த.வெ.க. அரசில் முக்கிய அதிகார மையமான மூன்றெழுத்து கடவுள் பெயர்கொண்டவரிடம் சரண்டரானார்.

அன்பில் மகேஸின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த நேரு தரப்பு, இதுகுறித்த விவரங்களை ஆதாரத்துடன் சேகரித்து, தலைமையிடம் பற்ற வைத்தது. 'நான் கட்சியில் சீனியர். 2011ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்தேன். என் தம்பி ராமஜெயத்தைக்கூட இழந்தேன். நடந்து முடிந்த ஆட்சியில்கூட தலைமைக்கு வேண்டியவர்கள் சொன்னதைத்தான் செய்தேன். இதனால் வழக்குகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அன்பில் மகேஸ் பேச்சைக்கேட்டு என்னை கடுமையாகக் காயப்படுத்தினீர்கள்' என தலைமையிடம் நேரு கொட்டித் தீர்த்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, ஒரு தனியார் குழுமத்துடன் இணைந்து இரண்டு சி.பி.எஸ்.சி பள்ளிகளை அன்பில் தரப்பு நடத்துவதாகவும், சில பெட்ரோலிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் தலைமைக்கு தெரியவந்திருக்கிறது. இதன்பிறகு, தி.மு.க. மேலிட குடும்ப உறவுகளும் அன்பில் மகேஸைப் பற்றி தீவிரமாக விசாரித்து பல தகவல்களை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இதனால் அதிருப்தியடைந்த உதயநிதி, முற்றிலும் அன்பில் மகேஸிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டார் எனவும், ஸ்டாலினும் தன் பிள்ளைபோல் பாவித்து வந்த அன்பிலை உதறினார் எனவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே மகேஸ் குறித்து, தி.மு.க. தலைமைக்கு சில கேள்விகளும் எழுந்துள்ளன. மின்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் செந்தில்பாலாஜி. அதுபோல ஏன் அன்பில் மகேஸ் செய்யவில்லை? அன்பில் மகேஸ் த.வெ.க.வில் சேரப்போகிறார் என சமீபத்தில் சோஷியல் மீடியாக்கள் ஊதிவிட்டன. அதை ஏன் அவர் மறுக்கவில்லை என்பவை எல்லாம் ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் நடந்த, கருணாநிதி நினைவு நாள் பேரணியில் அன்பில் மகேஸ் பங்கேற்கவில்லை.

ஆகஸ்ட் 4 அன்று நடந்த உதயநிதி கைதின்போதும், அவர் பெரிதாக தன் எதிர்ப்பை காட்டவில்லை. பெயருக்கு திருச்சி ஏர்போர்ட்டில் உதயநிதியை சந்தித்துவிட்டு கிளம்பினார்" என சொல்லி முடித்தார். தி.மு.க. தரப்பிலான கேள்விகள். இதற்கேற்ப, இதுகுறித்து கேட்க அன்பில் மகேஸை தொடர்புகொண்டோம். ஆனால் அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow