நீக்கப்பட்ட இருமல் Syrup.. இனி இது இருந்தாதான் கிடைக்கும்..!
இருமல் சிரப்புகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மாசுபட்ட இருமல் சிரப்புகளை உட்கொண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் இந்த விவகாரத்தை தேசிய அளவில் கவனத்திற்கு கொண்டு வந்தது. இதையடுத்து, இருமல் சிரப்புகளின் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மருந்து ஆலோசனைக் குழு விரிவாக ஆலோசனை நடத்தியது. அதன் பரிந்துரையின் அடிப்படையில், இருமல் சிரப்புகளை மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, கோடீன் போன்ற ஓபியாய்டு கலந்த இருமல் மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என கூறப்படுகிறது.
மேலும், பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரை இன்றி விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த மருந்துகளின் பட்டியலான 'ஷெட்யூல் கே'யில் இருந்து இருமல் சிரப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், சிறிய குழந்தைகளுக்கு பொருந்தாத சில மருந்துகள் தவறுதலாக வழங்கப்படுவதைத் தடுப்பதற்கும் இந்த விதிமுறை உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்வதோடு, குழந்தைகளின் உயிர் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நடவடிக்கையாக இதை மத்திய அரசு விளக்கியுள்ளது.
What's Your Reaction?