கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு...பெண்மை மேன்மையின் எண்ணதாசன்!!
காதல், பெண்மை, தாய்மை ஆகியவற்றை உயர்வாகப் பாடிய கவியரசர் கண்ணதாசனின் கவிதை உலகின் சிறப்பை இந்தக் கட்டுரையில் காண்போம்.
சப்தரிஷி லா.ச.ரா.
கவிஞர் கண்ணதாசனுக்கும் காதலுக்கும் ரொம்பவே நெருக்கம் உண்டு. முதல் பாட்டே 'கன்னியின் காதலி'க்கு. கண்ணதாசனை வாலி அறிமுகப்படுத்திக்கொண்டது அரு.ராமனாதனின் 'காதல்' பத்திரிகை அலுவலகத்தில்! பெண்மையின்மீது காதல் கொண்டவர் கண்ணதாசன். காதல் என்பதே பெண்மையின் உயர்நிலை என நம்புபவர் எனவே, காதலை எந்தக் கொச்சை வார்த்தையாலும் கீழ்மைப்படுத்தாமல் மேம்படுத்தியே வந்திருக்கிறார்.
'வேட்டை உள்ளம் வலைவிரித்து வேங்கை வருமென நின்றது. வேங்கைக்காக விரித்த வலையில் வெள்ளிக்கலைமான் விழுந்தது' எனச் சொல்லும்போது வேங்கையை விட வெள்ளிக் கலைமானைப் புகழ்கிறார்
'கண்ணன்முகம் பார்த்த கண்கள் மன்னர்முகம் பார்த்ததில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை'
பெண்ணின் காதல் மன கற்பு எல்லை கண்ணனைத் தவிர (காதலனைத் தவிர) எல்லைதாண்டி மன்னனிடம் (வேறு எந்த ஆண்மகனிடமும்) போகாது என உயர்த்துகிறார்.
கண்ணதாசனின் பெண்மைப் பாடல்களில் நான் கண்டது, அந்தப் பாடல் முடிந்த பின்னும் ஏன், படமே முடிந்த பின்னும் படத்தைத் தாண்டி நம்முடைய காதலுக்கும் பொதுவாய் அமைந்திருக்கும் அதிசயம் காணலாம்.
பொண்ணுக்கென்ன அழகு, பூவுக்கென்ன பெருமை..
பாட்டெழுதட்டும் பருவம், இசையமைக் கட்டும் இதயம்.
மகாராஜன் உலகை ஆளலாம், அந்த மகாராணி அவனை ஆளுவாள்..'
'அன்பு நடமாடும் கலைக்கூடமே, ஆசை மழை மேகமே..
பிரமிக்க அடிக்கும் கவிஞன் கண்ணதாசன். பெண்மை பற்றிச் சிந்திக்கும்போது அவர் மனதில் மென்மையும் மேன்மையும் மேலோங்கி விடுகிறது. ஆசைத்திலகம் அள்ளி அணிந்தான், அன்புத்திலகம் துள்ளிவிழுந்தான் என்கிறார். அள்ளி அணைப்பது பெண்மீதுள்ள ஆசை; துள்ளி விழுந்தது பெண்ணுக்குள் இருந்த பெண்மையின் அடையாளச் சின்னமான குழந்தை! பெண்மீதுள்ள ஆசையை அவள் அன்பாகத் திருப்பித் தருவாள் என்கிறார்.
அதற்கு இணையான அதே அர்த்தம் தரும் ஒரு பாடல் வரி 'கட்டில் கண்டாள் அங்கு நான் பிள்ளையே, தொட்டில் கண்டாள் அங்கு என் பிள்ளையே' என்கிறார். இன்னும் ஒருபடி மேலே போய் பெண் அன்பு மிகுதியில் தன் கணவனையும் பிள்ளையாகத்தான் பார்ப்பாள் என்கிறார். அந்தக் குழந்தை பெண் குழந்தையாய் அமைந்து விட்டால்.? 'பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ, பாப்பாவைப் படைத்தவன் அவன் தானே' என்பதோடு நில்லாமல், பெண் குழந்தையை மேன்மைப்படுத்தும் விதமாக 'பாப்பாவைப் படைத்த கைகளினாலே பால் போன்ற நிலவைப் படைத்தானே' என்கிறார். அந்தப் பெண் வளரும் போதே தூக்கம் பற்றி எச்சரிக்கிறார்.
'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே...' என்பதோடு ஒரு மகிழ்ச்சிச் செய்தியாக மாலையிட்ட கணவன் சேலை தொடும்போது மங்கையரின் தேனிலவில் கண்ணுறக்கம் ஏது? என்கிறார். 'பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் பெண் மனது என்னவென்று புரியவில்லையே!" பெண் மனதின் ஆழம் பற்றிப்பாடுகிறார். கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம், கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்' என்று பக்தி இலக்கிய ஒப்பீடு செய்துவிட்டு அடுத்த வரியிலேயே, 'உண்டென்று சொல்வது உந்தன் கண்ணல்லவா, இல்லையென்று சொல்வது உந்தன் இடையல்லவா...'
என்று வர்ணிக்கிறார்
அதற்கு இருபது வருடங்கள் கழித்து ஒரு பாடலில் இதே 'இல்லாத இடையைப் பற்றி... தரையோடு வானம் விளையாடும் கோலம் தொடுவானம்) இடையோடு பார்த்தேன்' என்கிறார். தொடுவானம் என்பது கண்களுக்குத் தெரியும்: ஆனால் உண்மையில் அப்படி ஒன்று கிடையாது. அதுபோல அவளது இடை இருக்கிறது. ஆனால் இல்லை என்கிறார் 'உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்குப் பார்வையைத் திறந்துவிடு என்கிற கவிஞரின் வரி, பெண் மீதான அதீத காதலை பக்தி என்கிறது. இன்னும் ஆன்மிகத்தின் உள்ளே போய்.. 'ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, ஓரடி ஈரடி மெல்ல எழுந்து, காதல் காவடி தூக்கும் கண்கள் இரண்டு...' என்கிற கண்ணதாசனின் 'காதல் காவடி' வார்த்தை கம்பனும் காணா கற்பனையின் அற்புதம் அல்லவா!
'காலளந்த நடையில் எந்தன் காதலையும் அளந்தாள், காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் என பெண்மைப்பூ பூப்பதை கவிதையில் காட்டுகிறார்.
பெண்ணின் பார்வை ஒரு கோடி, அவை பேசும் வார்த்தைகள் பல கோடி' என்று எழுதியதைத் தொடர்ந்து, பார்வை யுவராணி கண்ணோவியம், நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம், இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்' எனக் காதலியை மட்டுமல்லாமல் காதலியின் பார்வை, நாணம், தோற்றம் எல்லாமே நான் கேட்ட ஓவியம், அதிலும் அது பொன்னோவியம் என்கிறார்.
பால் என்று சொன்னாலும் பழம் என்று சொன்னாலும் ஏன் என்று தேன் வாடுமே என்றுவிட்டு, 'இன்று நானும் கவியாக யார் காரணம், அந்த நாலும் விளையாடும் விழி காரணம்' என்கிற வரியில், அவள் விழியில் விளையாடும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்கிற நாலும்தான் நான் கவியாகவே காரணம் என்று பாடி, சுவிதா மனம் பெற்ற யாவரையும் நெகிழ வைக்கிறார். இன்னுமொரு பாடலில் மொழியாலேயே மொழியைத் திகைக்க அடிக்கிறார். "முத்துச்சரமே எந்தன் பக்கமிருந்தால் வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும், முன்னமிருக்கும் இந்த சின்னமுகத்தில் பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும்'
'மாரியம்மன் திருநாளில் மங்கை உன்னைப் பார்த்த பின்னே தேருதன்னைப் பார்க்கவில்லை அய்யே அய்யய்யே என்று எழுதி 'உன்னைவிட மாரியம்மன் தேர் முக்கியமில்லை' என்கிறார். 'நான் கலைஞனல்ல உன்னை சிலையாக்க, நான் கவிஞனல்ல உன்னைத் தமிழாக்க, நான் மன்னனல்ல உன்னை முடிசூட, வெறும் மனிதன் ஆனதால் மயங்குகிறேன்' என்கிறார் கண்ணதாசன், காதலின் உச்சம் பெண்மையின் உச்சம்.
மேன்மையின் உச்சம் தாய்மைதான் என அடித்துச் சொல்கிறார் கண்ணதாசன். ஆலயமணியில் 'ஆலமரத்தின் விழுதினைப்போலே, அணைத்து நிற்கும் உறவு தந்தாயே வாழைக்கன்று அன்னையின் நிழலில், வாழ்வது போலே வாழவைத்தாயே, ஒரு சிறுமியாக இருந்தாலும், கிழவியாக இருந்தாலும், நடுத்தரப் பெண் ஆனாலும், பிச்சைக்காரன் கூட அம்மா தாயே என்றுதான் கூப்பிடுகிறான்; நாமும் அப்படித் தான் இருக்கவேண்டும் என்கிறார்.
உன்னை நினைத்து உலகில் இருந்தேன், உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்' என்று பாடி, நீயின்றி நானில்லை' என அழுகிறார் எங்கிருந்தோ வந்தாள்' சிவாஜி.
சரணாகதி அடைந்த காதலனின் மனதை கனியில் வாங்கிய முகம், கரும்பை மீறிய ரசம், ரதியை மீறிய சுகம், இன்று நான் அதன் வசம் என 'பாதுகாப்பு' படப் பாடல் வரியில் காட்டுகிறார். எனக்கு அக்கா இல்லை. அதனால் அக்காவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், அக்காவைப் பெற்றவன் ரெண்டு அம்மாவைப் பெற்றவன் என்று நினைப்பேன்" என்கிற இந்தக் கவிஞரைவிட தமக்கை உறவை உயர்த்திவைக்க யாரால் இயலும்?
மேகத்தால் மழை பொழியும், மேகத்துக்கு லாபம் என்ன? தியாகத்தால் எமை வளர்த்த தெய்வத்துக்கு லாபம் என்ன? தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உனது உள்ளம், மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கு ஈடு சொல்ல." கங்கை வெள்ளம் சங்குக் குள்ளே அடங்கிவிடாது, மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது?' பெண்ணின் மனம் பற்றிக் கவிஞர் இயம்பிய வரிகள் இவை ஆனால், தன்னையறிந்த, தன் மனதை அறிந்த பெண்ணின் எண்ணத்தைப் பாருங்களேன்..
'சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி, மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி, ஞானியின் மனமோ ஆசையின் தேனி, நான் ஒரு ராணி, பெண்களில் ஞானி எவ்வளவு தன்னம்பிக்கை!
முல்லைக்குக் குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ, பிள்ளைக்குத் தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ" என்ற கண்ணதாசன், அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ, அணைப்பில் அடங்குபவளும் அவளல்லவோ, கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும் இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ, பெண் இயற்கையின் சீதன பரிசல்லவோ' எனப் புகழ்ந்து உச்சிமுகர்கிறார் மன்னவனே ஆனாலும் பொன்னளந்து கொடுத்தாலும் பெண் மனதை நீ அடைய முடியாது, வாள்முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும் உடலன்றி உள்ளம் உனைச் சேராது' என்று ஒரு பெண்ணின் திடமான மன உறுதியைப் போற்றுகிறார் கவியரசர்.
'இன்னும் பல்லாண்டு இறைவன் எனக்குக் கொடுப்பதற்காகவே என் மொழியில் அவள் புகழை ஏற்ற முற்படுகிறேன்' என்றும் கூறியிருக்கிறார்.
'காதலித்தல் பாவம் என்றால், கண்களும் பாவம் அன்றோ,
கண்களே பாவம் என்றால், பெண்மையே பாவம் அன்றோ,
பெண்மையே பாவம் என்றால் மன்னவரின் தாய் யாரோ..?'
எனச் சுளீரென்று கேட்டு, உலகில் தாய்மையை விடப் பெரிது வேறொன்றில்லை எனத் தீர்ப்பெழுதிவிட்டார். பெண்மையின் மேன்மையைப் போற்றியவர் கண்ணதாசன். கவிஞர்களின் கவிஞர் கண்ணதாசன் அவர் சொன்னால் அதற்கு மறுப்பேது? வருவார் கண்ணதாசன்...
What's Your Reaction?