தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளா? அரசின் பிரமாணப் பத்திரத்தில் உள்ளது என்ன?
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்காக மாவட்ட வாரியாக நிலங்களை அடையாளம் காண வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளுக்கான இடங்களை கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதனுடன், இப்பள்ளிகளை அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டையும் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில், கல்வி பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் கல்வி சார்ந்த கொள்கைகளை உருவாக்குவதிலும், அதற்கான சட்டங்களை இயற்றுவதிலும் மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில சட்டத்துக்கு முரணாக இருக்கும் மத்திய அரசின் நிர்வாகக் கொள்கைகளை மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என அரசு தெரிவித்துள்ளது.
நவோதயா பள்ளிகளை கட்டாயப்படுத்த முடியாது:
நவோதயா பள்ளிகளை அமைக்க வேண்டும் என்றோ, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்த முடியாது என பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், நிலம் தொடர்பான முடிவுகளை எடுப்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நிலத்தை அடையாளம் காண்பது, அதன் பயன்பாடு மற்றும் உரிமை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசின் முடிவை கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்ற உத்தரவு இருக்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளுக்காக நிலத்தை கண்டறிய வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ரூ.5,109.90 கோடி நிதி நிலுவை:
இதனிடையே, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.5,109.90 கோடி மத்திய நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் பிரமாணப் பத்திரத்தில் அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிதி கிடைத்தால், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மாணவர்களுக்கான கல்விச் சூழலையும் மேலும் வலுப்படுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நவோதயா பள்ளிகளுக்கான நிலம் ஒதுக்கீடு தொடர்பான உத்தரவு, மாநிலத்தின் கல்விக் கொள்கை மற்றும் நில நிர்வாக அதிகாரம் ஆகியவை தொடர்பான விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
What's Your Reaction?