'NEET ஒழிப்பே தீர்வு'.. மாணவர்கள் கைது விவகாரத்தில் மு.க. ஸ்டாலின், உதயநிதி சாடல்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் மீது நடந்த தடியடி மற்றும் சென்னையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Jul 22, 2026 - 10:10
Jul 22, 2026 - 10:11
'NEET ஒழிப்பே தீர்வு'.. மாணவர்கள் கைது விவகாரத்தில் மு.க. ஸ்டாலின், உதயநிதி சாடல்!

'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் (20.08.2026) நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

இதற்கிடையே டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 25 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதைபோல நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகர் தபால் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, புதுதில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெருமளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் NEET தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் எச்சரித்தது நாங்கள்தான். அதனால்தான், நீட் தேர்வு ஏற்படுத்தும் ஆபத்துகளை தொடக்கம் முதலே சுட்டிக்காட்டி, அதனை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இந்தியாவில் சமூகநீதியை காக்க முன்னிலை வகித்ததோடு, முதல் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை AbolitionOfNEET (நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்) என்பதுதான்.

வேறு எந்தக் கோரிக்கையைவிடவும், இந்தப் போராட்டங்களின் மையக் கோரிக்கையாக நீட் ஒழிப்பு இருக்க வேண்டும். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதன் மூலமே இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் இதனை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது, சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow