விஜயால் அடித்த அதிர்ஷ்டம்.. திமுகவுக்கு பதிலடி.. எம்.பி.ஆகும் பிரவீன் சக்ரவர்த்தி?

காங்கிரஸில் ராகுல்காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் இந்த பிரவீன் சக்ரவர்த்தி? இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

விஜயால் அடித்த அதிர்ஷ்டம்.. திமுகவுக்கு பதிலடி.. எம்.பி.ஆகும் பிரவீன் சக்ரவர்த்தி?

2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்ற தவெக 108 இடங்களை பிடித்த தவெக, திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தது. இதில் விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் தொங்கு சட்டமன்றத்தைக் காரணம் காட்டி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது என்பதால் தவெகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தன. ஆனால், காங்கிரஸோ அதிகாரம், ஆட்சியில் பங்கு ஆகியவற்றிற்காக திமுகவுடன் பேச்சுவார்த்தை கூட நடத்தாமல், தேர்தல் முடிவுகள் வெளியான உடனே கூட்டணியில் இருந்து கழன்று தவெக கூடாரத்தில் ஐக்கியமானது. 

இதனைத் தொடர்ந்து, இனி எக்காலத்திலும் காங்கிரஸூடன் கூட்டணி இல்லவே இல்லை என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. தற்போது காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி வைத்து அமைச்சரவையிலும் இடம்பிடித்துவிட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவை எம்.பி. ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தவெகவிற்கு 2-3 மாநிலங்களவை எம்.பிக்கள் கிடைக்கும் பட்சத்தில், அதில் ஒன்றை கேட்டு காங்கிரஸ் டிமாண்ட் வைத்துள்ளதாகவும், அதுதொடர்பாகத்தான் இன்று(ஜூன் 03) காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரஸிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கிடைக்கும்பட்சத்தில் ராகுல்காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தியை எம்.பி. ஆக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தகையச் சூழலில், ஒருவேளை பிரவீன் சக்ரவர்த்தியை எம்.பி. ஆக்குவது என்பது திமுகவை சீண்டிப் பார்ப்பதற்கு சமம் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

கடந்த 2024 எம்.பி. தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிட சீட் கேட்ட பிரவீன் சக்ரவர்த்தியை, ”அவர் கள அரசியலில் ஈடுபடவில்லை.. மக்களை சந்திக்கும் தலைவராக அவர் இல்லை” என்று கூறி அவருக்கு சீட் கொடுக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டதாகவும், அவருக்கு பதிலாகத்தான் ராகுல்காந்தியின் யாத்திரையில் முக்கிய பங்கு வகித்த சுதாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு திமுகதான் காரணம் என நினைத்துக்கொண்ட அவர், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்காரணமாக தான் அவர், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிலிருந்தே தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசி வந்தார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். எப்படியாவது, திமுக – காங்., கூட்டணியை உடைப்பதில் தீவிரமாக இருந்த அவர், திமுக தோற்றதும் தவெக உடன் உடனடியாக இணைய வேலைப்பாடுகளை செய்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, தவெக – காங்க்., கூட்டணி அமைய பிரவீன் சக்ரவர்த்தி மிக முக்கியக் காரணமாக இருப்பதால், தன்னை ராஜ்யசபா எம்.பி ஆக்க பிரவீன் வைத்தக் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொண்டதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow