போற இடமெல்லாம் கண்ணிவெடியா ? ... செபாவின் எம்எல்ஏ பதவிக்கு செக் வைக்கும் தவெக!

தவெக அரசு செந்தில்பாலாஜியை துரத்திக் கொண்டிருக்கின்ற நிலையில் தற்போது அவருடைய எம்எல்ஏ பதவிக்கு செக் வைக்க போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Aug 12, 2026 - 21:28
போற இடமெல்லாம் கண்ணிவெடியா ? ... செபாவின் எம்எல்ஏ பதவிக்கு செக் வைக்கும் தவெக!

ஆளும்கட்சியான த.வெ.க. அரசு செந்தில்பாலாஜியை துரத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், இதுதான் வாய்ப்பு என கோவை த.வெ.க. & அ.தி.மு.க. பிரமுகர்கள் பாலாஜியின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி வருவதாக அவரின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பதுதான் இன்றைய தேதியில் கோவை அரசியல் அதகளம்!

கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி, தவெக ஆட்சி அமைந்த பிறகு வழக்குகளால் விரட்டப்படுகிறார். அந்த வழக்கு நடைமுறைகளால், அவரால் சமீபகாலமாக தொகுதி பக்கமே வர முடியவில்லை. சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டிய சூழல். இந்த சூழ்நிலையில்தான் 'ஆப்சென்ட் பாலாஜியே, ராஜினாமா செய்! என்று அவரை எம்.எல்.ஏ பதவியில் இருந்து விலகச் சொல்லி, கோவை தெற்கு தொகுதியிலிருந்து கலகக் குரல் வெடித்துள்ளது.

சோஷியல் மீடியாவிலும் வைரலாகும் இந்த பேச்சின் பின்னணியில் கோவை மாவட்ட த.வெ.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் கைகோத்து நிற்பதுதான் அரசியல் ஹாட் "பாலாஜிக்கு எதிராக ஏன் இந்த கலகம்?" என உள்ளூர் அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்டோம். உன்னிப்பாக கவனித்தால் மிக சென்சிடிவ்வான அரசியல் மூவ் இது.

செந்தில்பாலாஜியின் அரசியல் இமேஜை காலி பண்ணுவதற்காக துவங்கப்பட்டுள்ள ஆபரேஷன் என்றே சொல்லலாம். கரூர் துயரச் சம்பவ விவகாரத்தில், பாலாஜியின் மூவ்கள் அத்தனையுமே விஜய்யை பர்ஷனலாக அதுவும் மிக ஆழமாக ரணமாக்கியுள்ளன. அதற்கான எதிர்வினையைத்தான் த.வெ.க. ஆட்சி அமைந்த நாள் முதலாகவே அனுபவித்துவருகிறார் செந்தில்பாலாஜி. அவர் மீது கொத்துக் கொத்தாக வழக்குகள் வலைப் பின்னலாக படர்ந்து வருகிறது.

2011-15ம் ஆண்டில் அப்போதைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசுப் பணிக்கு லஞ்சம் வாங்கிய வழக்கு ஏற்கெனவே அவரின் கழுத்தை நெரிக்கும் நிலையில், கரூரில் 41 பேர் பலியான வழக்கின் சி.பி.ஐ. விசாரணையிலும் இவர் இருக்கிறார். தற்போது, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்தியதாக சொல்லப்படும் வழக்கிலும் சிக்கியுள்ளார். தவிர, மதுபானக் கொள்முதல், டெண்டர் முறைகேடு, சட்ட விரோதமாக பார் நடத்தியது, டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றது போன்றவற்றில் பாலாஜி உட்பட 7 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. கோவை தெற்கு தொகுதி விசாலமான தொகுதி. இங்கே இஸ்லாமியர்கள் மற்றும் வட இந்தியர்களின் வாக்கு வங்கியும் கணிசமாக இங்கு இருக்கிறது.

இதுபோக தினமும் பல கோடிகள் புரளும் பல வகை தொழில்களும் நடக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்தொகுதியில் குடிநீர், தூய்மைப் பணிகள், முதியோர் பென்ஷன் போன்ற அத்தியாவசியப் பிரச்னைகள் தொடங்கி நிதி மோசடி, போலீஸ் பஞ்சாயத்து, ஆட்சியரின் அலட்சியம் என பல்வேறு கோரிக்கைகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் தீர்வை தேடித் தர வேண்டிய எம்.எல்.ஏவோ தற்போது கோவையிலேயே இல்லை. மக்களுக்காக கலெக்டரை சந்திக்கவோ, தொகுதிக்குள் நடக்கும் நிகழ்வுகளில் வந்து நிற்கவோ பாலாஜியால் முடியவில்லை.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி கோவையில் பாலாஜியின் அரசியல் ஆட்டத்தை காலி பண்ண ஆளும் த.வெ.க. முயற்சி பண்ணுகிறது. செந்தில்பாலாஜியிடம், தி.மு.க. மண்டலப் பொறுப்பாளர், எம்.எல்.ஏ. போன்ற அதிகாரம் இருப்பதால் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாலாஜி நிச்சயம் இறங்கி அடிப்பார். அத்தேர்தலில் நூறு சதவிகிதம் வெற்றியை எதிர்பார்க்கும் த.வெ.க.வுக்கு பாலாஜி மிகப்பெரிய சவாலாக இருப்பார். அதனாலேயே அவரது ஃபியூஸை பிடுங்குவதற்கான வேலைகளை இப்பவே தொடங்கியிருக்கிறார்கள்.

அதில் முக்தியய நகர்வாகத்தான் சோஷியல் மீடியாவில் கிளப்பப்பட்டுள்ள இந்த கோஷம். த.வெ.க.வின் ஐ.டி.விங் மிக திட்டமிட்டு இதை செய்துவருகிறது. பாலாஜியால் கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்மை இல்லை என மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் கோவை மாவட்டம் முழுக்கவே அவரது அரசியல் இமேஜை டேமேஜ் செய்யும் அலையை உருவாக்கிட திட்டமிட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தை போஸ்டர் அடித்து ஒட்டவும், அவரது தொகுதி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்ட மிட்டிருக்கிறார்கள். கோவையில் பாலாஜியின் அரசியலை காலி பண்ண துடிக்கும் அ.தி.மு.க.வும் அக்கட்சியின் ஐ.டி விங்கும் இதையெல்லாம் சத்தமில்லாமல் ஆதரிக்கிறது." என்று முடித்தனர்.

இதுபற்றி கேட்க செந்தில்பாலாஜிக்கு நாம் போன் செய்தபோது அவர் ஏற்கவில்லை. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் சென்றபோது அங்கிருந்த அவரது உதவியாளர்கள் இருவர் நம்மிடம் வழக்குகளால் எம்.எல்.ஏ. பாலாஜியால் இப்போதைக்கு வரமுடியவில்லை. மக்களின் தீர்வு நூறு சதவிகிதம் தருகிறோம். விரைவில் பாலாஜி தொகுதிக்கு வருவார்" என்றனர்.

பாலாஜியை எதிர்த்து அதிமு.க. மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜூனனிடம் பேசியபோது, "தேர்தல் பிரசாரத்திலேயே, 'பாலாஜி வெளியூர் ஆள். ஏகப்பட்ட கேஸ் வேற இருக்கிறது, அவரை நம்பாதீங்க'னு படித்து படித்து சொன்னேன். பாவம் மக்கள் ஏமாந்துவிட்டார்கள். இப்போது நான் வார்டு வார்டாக போய் மக்கள் குறைகளைக் கேட்டு, என்னால் முடிஞ்சதை செய்றேன்' என்றார்.
மதுவிலக்குத் துறை அமைச்சரும், கோவை தவெக மாவட்டச் செயலாளருமான விக்னேஷிடம் கேட்டபோது, "செந்தில்பாலாஜிக்கு எதிராக சட்டம் தன் கடமையை சரியாக செய்துவருகிறது. மக்களுக்கு அவரது உண்மை முகம் தெளிவாக புரிய துவங்கியுள்ளது. கோவை தெற்கு மக்களுக்கு உரிய எல்லா நன்மைகளையும் முதல்வர் விஜய் உத்தரவில் நாங்கள் நிறைவேற்றுவோம்" என்றார்.

செந்தில்பாலாஜிக்கு எல்லா பக்கமும் இடி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow