எதிரிகள் ஜாக்கிரதை- மாலைமதி....
மருத்துவமனை செலவாக ரூ.40 ஆயிரத்தை சிங்கம் செலுத்தி, அம்மாவை முழு பொறுப்புடன் கவனித்தது குடும்பத்தினரையும் பூங்கொடியையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இது உண்மையான மாற்றமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது.
அண்ணன் எங்கே போனான் என வள்ளிக்குத் தெரியவும் இல்லை; அவன் எதையும் யாரிடமும் சொல்வதும் இல்லை. அவள் கணவன் மட்டும் இரவில் காவலுக்கு வந்தான். "என்னங்க, அம்மா டிஸ்சார்ஜ் ஆகி வந்தாலும் எப்படிச் சமாளிப்பாங்கன்னு எனக்குத் தெரியலை!" "நீ இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்து அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணு, வள்ளி! எனக்கு எந்தத் தடையும் இல்லை!"
"இல்லீங்க, அது சரிப்படாது. உங்களை விட்டுட்டு நான் இங்கே இருக்கிறது முறையில்லை. அம்மாவே அதை ஏற்க மாட்டாங்க!"
"உங்கண்ணனுக்குக் கல்யாணம் நடந்து இந்த வீட்டுக்கு ஒரு மருமகள் வந்தா, உங்கம்மாவுக்கு ஓய்வு கிடைக்கும்!” "நல்ல மருமகளா வரணும். அம்மாவுக்கு அந்த உறவு தலைவலியா மாறிடக்கூடாது. உங்கண்ணனுக்கு, விவரம் தெரிஞ்ச யாரும் அத்தனை சுலபமா பெண் தர மாட்டாங்க!"
"ஆமாங்க, அது பெரிய சிக்கல்!" "மாணிக்கத்துக்குக் கல்யாணம் செஞ்சு, அவர் வழியால மருமகள் வந்தாலும், உங்கம்மாவுக்கும் ஒரு வடிகால் உண்டு. மாணிக்கம், குடும்பப் பற்றும் பாசமும் உள்ளவர். அதனால, வர்றவ வாலாட்ட மாட்டா!" "பெரியவனை விட்டுச் சின்னவனுக்கு எப்படிக் கல்யாணம் செய்யறதுன்னு அம்மாவே கேப்பாங்க!" "குடும்ப நலன் கருதி உங்கம்மா சில பிடிவாதங்களை இனி தளர்த்திக்கணும். அம்மா வீடு திரும்பினதும் நீ பேசிச் சம்மதிக்க வை. ஏதாவதொரு நல்லது இந்தக் குடும்பத்துக்கு நடக்கணும்!" இரவு மாணிக்கம் வெளியூரிலிருந்து ஃபோன் செய்தான். "அதிசயங்கள் நடக்குது நம்ம குடும்பத்துல!" என்றான். "நீ என்ன சொல்ற, புரியலை!" “சிங்கம் ரெண்டு நாளா வீட்டுக்கு வரலை, இல்லையா?" "அதெப்படி உனக்கு தெரியும்?" "ஒரு அண்ணன் வீட்டுக்கு வரலைன்னா ஏன் வரலை, அவன் எங்கே இருக்கான்னு கேக்க மாட்டியா வள்ளி?"
"கேட்டா மட்டும் அவன் சொல்லிடப்போறானா? அதை விடு, நம்ம குடும்பத்துல என்ன அதிசயம் நடக்குது?” "அண்ணன், அம்மாகூட ஆஸ்பத்திரில தங்கி, நல்ல பிள்ளையா அம்மாவுக்குப் பணிவிடையெல்லாம் செஞ்சு கின்னஸ் ரெக்கார்ட்ல இடத்துக்குப் பதிவு செஞ்சிருக்கறதா தகவல்! உள்ளூர்ல இருந்து உனக்குத் தெரியலியா?" "அப்படியா, உனக்கு யார் சொன்னது?” "சிஸ்டர் பூங்கொடிக்கு ஃபோன் பண்ணினப்ப, அவங்களே அதிசயப்பட்டு இந்தத் தகவலைச் சொன்னாங்க. அம்மா அளவு கடந்த சந்தோஷத்துல மிதந்து, புதுத் தெம்போட நடமாடறதா தகவல்!" "இந்தத் தகவல் நம்பும்படியா இருக்கா?"
"இதை வேற யாராவது சொல்லியிருந்தா, நான் நம்பவே மாட்டேன். சொன்னது பூங்கொடி. அவங்க பொய் சொல்ல மாட்டாங்க. இது வேஷமானு நான் உடைச்சுக் கேட்டேன். 'நானும் முதல்ல அப்படித்தான் நெனச்சேன் மாணிக்கம். அம்மாவும் நம்பலை. ஆனா, பொய் இல்லை. அவருக்கு அம்மாகிட்ட வேஷம் கட்டி என்ன லாபம்?'னு கேக்கறாங்க பூங்கொடி. டாக்டர் உட்பட எல்லார் கால்லேயும் சகட்டுமேனிக்கு இவன் விழுந்திருக்கான். இவன் அந்த மாதிரி ஆள் இல்லைனு நமக்குத்தான் தெரியுமே!"
"இப்பக்கூட என்னால ஏத்துக்க முடியலை!" "சரி, பாக்கலாம். உள் நோக்கத்தை ரொம்ப நாளைக்கு மறைச்சு வைக்க முடியாது. அது வெளில வந்தே தீரும், வள்ளி! நான் பக்கத்துலதானே இருக்கேன். அம்மாவுக்குப் புத்திக் கூர்மை அதிகம். அவங்க பார்வைலேருந்து யாரும் தப்பிக்க முடியாது!" "அதுவும் சரிதான்! அம்மா வந்த பிறகு நாலு நாட்கள் நான் இங்கேதான் இருப்பேன். நீயும் வந்துடப்போறே. யாராவது ஒருத்தர் அவன் தோலை உரிச்சிடலாம். மாட்டுவான் எப்படியும்!" அதே நேரம் ஆஸ்பத்திரியில், மறு நாள் அம்மாவுக்கு டிஸ்சார்ஜ் என்று சொல்லி விட
"எப்ப பில்லுக்குப் பணம் கட்டணும்? பில் எப்ப வரும் பூங்கொடி?" சிங்கம் கேட்க, "நீங்க கூட்டிட்டுப் போங்க. உங்க தம்பி வந்து பணம் கட்டிக்கிறேன்னு எங்கிட்ட சொல்லிட்டார்!" "வேண்டாம். நான் அவங்க மூத்த மகன். எனக்கும் பொறுப்பு இருக்கு. நான் பணத்தைக் கட்டிர்றேன். பில் தரச்சொல்லுங்க. தொகை தெரிஞ்சுக்கிட்டுப் பணத்துக்கு ஏற்பாடு செய்யணும்!" அம்மா ஆச்சர்யப்பட்டாள். ஏதோ பேச வர, சைகையால் பூங்கொடி அம்மாவை அடக்கினாள். ஒரு மணி நேரத்தில், பில் வாங்கித் தந்தாள். அதன் தொகை ரூபாய் நாற்பதாயிரம் எனக் காட்ட, "நான் பணத்தோட வர்றேன், பூங்கொடி. நாளைக்குத்தானே டிஸ்சார்ஜ்?" என்றபடி அவன் புறப்பட்டுப் போக, "இவன் பணம் கட்டுவானா? இப்ப வரைக்கும் குடும்பத்துக்காகப் பத்து ரூபாய் செலவழிச்சதில்லை. அவன் நாற்பதாயிரம் கட்டப்போறானா? எனக்கு நம்பிக்கை இல்லை, பூங்கொடி!" "அம்மா, இவர் கட்டலைன்னாலும் மாணிக்கம் கட்டுவார். அதனால நீங்க கவலைப்பட வேண்டாம். ஒருத்தர் பொறுப்பை ஏற்க முன்வரும்போது, நாம தடுக்கக்கூடாது. 'நான் செய்யத்தான் வந்தேன், நீங்க அனுமதிக்கலை'னு நம்ம மேல அவர் திருப்ப வாய்ப்பிருக்கு. விடுங்க, அவர் சரியான பாதைக்கு வர்றார்னா, இதுதான் ஆரம்பம்!"
அம்மாவால் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால், மாலை 6 மணிக்கு ஆஸ்பத்திரிக்குத் திரும்பிய சிங்கம், நாற்பதாயிரம் ரூபாயைப் பூங்கொடியிடம் தந்தது. "நீங்களே கட்டிடுங்க. அம்மா ஃபைலைத் தர்றேன்!" அவன் கட்டிவிட்டு ரசீதுடன் வந்தான். மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டான். அது ரெண்டாயிரம் ரூபாய்க்கு வந்தது. அதையும் வாங்கி வந்தான். அம்மாவுக்கு எப்படி அதைத் தர வேண்டும் என டோசேஜ் கேட்டுக் கொண்டான். அம்மாவின் டயட் பற்றி விசாரித்தான். அம்மாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகத் தந்துகொண்டே இருந்தான். "பூங்கொடி, என்னம்மா நடக்குது? என்னால எதையுமே நம்ப முடியலியே!”
"அம்மா, ஒரு பெரிய தொகையைச் செலவழிச்சு அவருக்குத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் மாறியிருக்க வாய்ப்பிருக்கு. அம்மாவுக்குச் செய்யற பொறுப்பு தனக்கும் இருக்குனு வெளிப்படுத்தற சந்தர்ப்பம் அவருக்கு இப்பத்தானே வந்திருக்கு? விடுங்க, அவரோட பொறுப்புகள் எப்படித் தொடருதுன்னு கவனிங்க. உங்க பிள்ளை மாறினது நிஜம்னா, உங்களுக்கு அது சந்தோஷம்தானேம்மா?"
"அதுல என்ன சந்தேகம்மா? நான் இத்தனை நாள் ஏங்கின ஏக்கத்துக்கு ஆண்டவன் பதில் தந்தாச்சுனு சந்தோஷப்படுவேனே!"
"மனுஷங்களுக்குச் சந்தோஷம்கூட டென்ஷனை உண்டாக்கும். அதனால இதுக்கும் உங்க மனசை சம நிலைல வச்சுக்குங்க. எது வந்தாலும் மனசு சமநிலை தவறாம இருந்தாத்தான் நிம்மதியா வாழ முடியும்மா!" அன்று இரவு வெளியே வந்து பூங்கொடியிடம் நிறைய நேரம் பேசினான் சிங்கம்.
"இப்பக்கூட அம்மா உட்பட உங்க யாருக்குமே என் மேல முழுமையான நம்பிக்கை வரலைனு எனக்குத் தெரியும். உங்க எல்லாருக்கும் எங்கிட்ட ஒரு சந்தேகப் பார்வை இருக்கு. அது இருக்கும். இத்தனை நாள் பொறுப்பில்லாம திரிஞ்ச ஒருத்தன், ஒரே நாள்ல மாறினா, யாராலும் நம்ப முடியாதுதான். கெடறது படிப்படியா கெடலாம்; ஆனா, மாற்றம் ஒரே நாள்ல வர்றதுதான் நியாயம். நிச்சயமா என்னை எல்லாரும் நம்புவீங்க. அந்த நாளுக்காக நான் காத்திருக்கேன்!"
அவனது தெளிவான பேச்சு பூங்கொடியை யோசிக்க வைத்தது.
What's Your Reaction?