குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்ட சோனம் வாங்சுக்.. காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கிய CJP நிறுவனர்..!
டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் சென்ற நிலையில், காக்க்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜீத் டிப்கே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து CJP வெளியிட்டுள்ள பதிவில், அபிஜீத் டிப்கே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளதாகவும், ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி ‘சலோ சன்சத்’ பேரணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் இன்று (ஜூலை 18) காலை அப்புறப்படுத்தியதாகவும், சோனம் வாங்சுக் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், வாங்சுக்கிற்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காகவும், உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கியும் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியான முறையில் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போலீஸ் நடவடிக்கைக்கு பின்னர், தன்னை தாக்கி தடுப்புக் காவலில் வைத்ததாக அபிஜீத் டிப்கே குற்றம்சாட்டினார். மேலும், சுமார் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த 60 வயதான சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
போராட்டத்தின் போது போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும், அபிஜீத் டிப்கே தடுத்து வைக்கப்பட்டதாகவும் CJP தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
NEET தேர்வு தொடர்பான முறைகேடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மாணவர்களின் உயிரிழப்புகளை கண்டித்து CJP தலைமையில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், AISA அமைப்பைச் சேர்ந்த நேஹா, ஆமீன் மற்றும் மனீஷ் உள்ளிட்டோரும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
What's Your Reaction?





