அமைச்சர்களையே மிஞ்சுகிறார்களா? சட்டமன்றத்தில் சௌமியா, பிரேமலதாவின் அதிரடி!

சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Sep 5, 2026 - 20:00
அமைச்சர்களையே மிஞ்சுகிறார்களா? சட்டமன்றத்தில் சௌமியா, பிரேமலதாவின் அதிரடி!
Premalatha Vijayakanth-Soumya Anbumani

தமிழக சட்டமன்றத்தில் அனுபவம் மிகுந்த எம்.எல்.ஏ.க்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்களைவிட சிறப்பாக மக்கள் பணியாற்றி வருவதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, பா.ம.க. எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி ஆகியோரை அரசியலைக் கடந்து பொதுமக்களும் பரவலாக பாராட்டி வருவதுதான், தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத அதிசயம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பிறகும் அமைச்சர்கள் மரிய வில்சன், ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் சட்டமன்றத்தில் பார்த்து படிப்பதற்கே திணறினர். ஆனால், அவர்களைப் போலவே முதல்முறை எம்.எல்.ஏ.வாக தேர்வான தே.மு.தி.க. பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த், பசுமை தாயகம் தலைவரும் பா.ம.க. தலைவர் அன்புமணியின் மனைவியுமான சௌமியா ஆகிய இருவரும் சட்டமன்றத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதிமுக்கியத்துவம் வாய்ந்த தமிழக உரிமைகள் மற்றும் மக்கள் பிரச்னைகளை விரிவாக எடுத்துரைத்து வருவதை கண்டு பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த ஊடகவியலாளர் ஒருவரிடம் பேசினோம். “முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு அமைந்த பிறகு முதல்முறையாக கடந்த ஜூன் 18ம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றினார். தொடர்ந்து, ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்மீதும், நீட் தேர்வு எதிர்ப்பு, மேகதாது அணை விவகாரம் என சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சட்டமன்றத்தில் ஆர்வமுடன் பங்கேற்ற சௌமியா, ஆளுநர் அறிக்கையின் பல்வேறு அம்சங்களை வரவேற்றதுடன் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி, பாலியல் வன்கொடுமைகள், இலவச மின்சாரம், காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகம் இழைத்த துரோகம், நெல் கொள்முதல் நிலையங்களின் அவலம் என பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார்.

இன்னொரு பக்கம், 'ஆளுநரின் அறிக்கையே ஆளும்கட்சிக்கு ஆதரவான அறிக்கைதான்' என எடுத்த எடுப்பிலேயே சீறிய பிரேமலதா, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களின் துயரங்களை ஆவேசமாக எடுத்துரைத்தார். மேலும் காவிரி நதிநீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு விவகாரம், மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டதை முதல்வர் உன்னிப்பாக கவனித்தார்.

தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, இருவருமே ஒரு நிமிடம்கூட வீணடிக்காமல் பேசி அசத்தினர்.  அதுவும் சௌமியா அன்புமணி மக்களை, மாநிலத்தை பாதிக்கும் முக்கியமான பல்வேறு விவகாரங்களை பேசியதோடு, 'மதுவுக்கு அடிமையானவர்கள் பொங்கல், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குடிக்கிறார்கள்.

இதனால், கிராமப்புறங்களில் பெண்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் கழுத்தில் வெறும் மஞ் சள் கயிறிலான தாலிதான் அணிந்திருக்கிறார்கள். இளம் விதவைகள் அதிகமாகிவிட்டார்கள்' என உருக்கமாக பேசியதை, நேரடி ஒளிப்பரப்பில் பார்த்த ஒட்டுமொத்த தமிழக மக்களும் சௌமியாவை மனதார பாராட்டியிருப்பார்கள்.

செளமியா தென்றல்போல பேசினால், எரிமலை யாக வெடித்தார் பிரேமலதா. ஆளும் கட்சியின் தவறுகளை ஆவேசமாக சுட்டிக் காட்டியதுடன் ஒவ்வொரு நாள் சட்ட மன்றம் கூடும்போதும், தி.மு.க.வை குற்றம் சுமத்தும் வகையிலேயே அமைச்சர்கள் பேசுவதால் சட்டமன்றம் சண்டை மன்றமாக மாறிவிடுகிறது' என கண் சிவந்தார்.
வீட்டில் ஹோம் வொர்க் செய்து குறிப்புகளோடு சட்டமன்றத்தில் பேச வருகிறோம்.

ஆனால், அதற்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. ஆதவ் அமைதியாக இருந்தால் சட்டமன்றமும் அமைதியாக நடைபெறும்' என சிரித்துக்கொண்டே பிரேமலதா கூறியதை முதல்வர் விஜய் உள்பட அமைச்சர்களும் சிரித்தவாறே ஏற்றுக்கொண்டனர்.சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் போல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பொறுப்புணர்வோடு பேசினால், தமிழக மக்களின் பல்லாண்டு கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்" என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம். "சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புடன் செயல்படுகிறார்கள். எம்.எல்.ஏ.க்களில் பலரும் தங்கள் தொகுதிப் பிரச்னைகளுக்குதான் முக்கியத்தும் கொடுப்பார்கள். அதற்கு மாறாக இருவருமே மாநிலத்தின் உரிமைகள், சமூக நலன் சார்ந்தவை குறித்து புள்ளி விபரங்களுடன் பேசுவது வரவேற்கத்தக்கது.

நலிவடைந்து வரும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் குறித்து நிறைய தகவல்களை திரட்டி வந்து சட்டமன்றத்தில் சௌமியா பேசியது பாராட்டுதலுக்குரியது. சுற்றுச்சூழல், விலைவாசி உயர்வு, சேவை உரிமைச் சட்டம், லோக் ஆயுக்தா என அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை இருவருமே விரிவாக பேசியிருக்கிறார்கள். பொதுவாக முதல்முறை எம்.எல்.ஏ.வாக வருபவர்களிடம் தயக்கம், கூச்சம் இருக்கும்.

ஆனால், இந்த இருவரிடமும் அப்படி எதுவும் இல்லை. மேலும், மூத்த உறுப்பினர்கள் பல நேரம் உணர்ச்சி வசப்பட்டு, பேச வேண்டியதைபேசாமல் வேறு விஷயங்களை பேசிவிடுவார்கள். அதுபோன்று இல்லாமல் இருவருமே முழு கவனத்தோடு தெளிவாக பேசுகிறார்கள். பொதுவாக, அமைச்சர்களுக்கு எல்லா விஷயங்களும் கவனத்திற்கு வந்துவிடாது. அரசு அதிகாரிகளும் முழு தகவலையும் அமைச்சர்களுக்கு சொல்ல மாட்டார்கள்.

அப்படிப்பட்ட சூழல் இன்றும் நிலவுவதால், சௌமியா, பிரேமலதா போல தொகுதி மற்றும் மாநிலங்களில் நிலவும் பிரச்னைகளை சட்டமன்றத்தில் பதிவுசெய்தால், அதன்மீது அமைச்சர்களும் கவனத்தை செலுத்தி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள். அவர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டால், சட்டமன்ற செயல்பாடுகள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்" என்றார்.

சிங்கப் பெண்களின் பணி சிறக்கட்டும்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow