ஆலய உலா EPISODE-4....தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்: சுவாரஸ்ய வரலாறு!

காசிக்கு நிகரான புண்ணியத் தலமாகப் போற்றப்படும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலின் சிறப்பையும், பராக்கிரம பாண்டிய மன்னனுக்கும் காசி விஸ்வநாதருக்கும் தொடர்புடைய சுவாரஸ்யமான ஸ்தல புராணக் கதைகளையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

Sep 14, 2026 - 08:00
ஆலய உலா EPISODE-4....தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்: சுவாரஸ்ய வரலாறு!
Kasi Viswanathar Temple

- வி.ராம்ஜி

‘எலே... அன்னிக்கி நாங்க தென்காசி தியானக் கிளாஸ்க்குல்லே போயிருந்தோம்’ என்று ‘பாபநாசம்’ சுயம்புலிங்கம் சொன்னதும் ‘எனக்கு தென்காசி கோயிலின் பிரம்மாண்டம் உடனே கண்ணுக்கு முன்னே வந்து நிற்கும். சில்லெனக் காற்றடித்து நம் தலையைக் கோதிவிட்டுக்கொண்டே இருக்கிற தென்காசியில், அந்தக் குற்றாலக் காற்று ஓங்கி உயர்ந்த கோபுரத்தின் பட்டு, நம் மீது விழும்போது, இன்னும் குளிர்ந்து போவோம்... வெளியிலும் அகத்திலும்! அதுதான் தென்காசி திருக்கோயிலின் பேரானந்தம்!

காசி எனும் புண்ணிய நகரத்துக்கு இணையான திருத்தலம் இங்கே பல தலங்களைச் சொல்வார்கள். திருச்சிக்கு அருகில் உள்ள திருவாசியையும் திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் கோயிலையும் அப்படிச் சொல்லுவார்கள். கும்பகோணத்துக்கு அருகிலும் கூட காசிக்கு நிகரான  கோயில்கள் நிறையவே உண்டு. ஆனால், வடக்கே உள்ள காசி எந்த அளவு முக்கியத்துவம் கொண்ட தொன்மையான கோயிலோ...  தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயிலும் அப்படித்தான்!

காசியில் இறந்தால் முக்தி என்றொரு வாசகம் பிரபலம். ஆனால் தென்காசியில், பிறந்தாலும் முக்தி. இருந்தாலும் முக்தி. இறந்தாலும் முக்தி என்கிறது ஸ்தலபுராணம். ஒருமுறையேனும் தென்காசி க்ஷேத்திரத்துக்கு வந்து காசி விஸ்வநாதரைத் தரிசித்தாலே முக்தி நிச்சயம் என்கிறார் சங்கர பட்டர்!

சச்சிதானந்தபுரம், முத்துதாண்டவ நல்லூர், ஆனந்தக்கூத்தனூர், சைவ மூதூர், தென்புலியூர் என்றெல்லாம் தென்காசிக்கு ஏகப்பட்ட பெயர்கள். செண்பகப்பொழில், சித்திர மூலத்தானம், மயிலைக்குடி என இன்னும் ஏராளமான பெயர்கள் தென்காசி க்ஷேத்திரத்துக்கு உள்ளன.

வடக்கே அமைந்திருக்கும் காசிக்கு நிகரான தலம் என்பதால் தெற்கே உள்ள இந்தத் தலத்துக்கு தென்காசி என்று திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தென்காசிக்கு அருகில் உள்ள விந்தன்கோட்டையைத் தலைநகராகக் கொண்ட பராக்கிரம பாண்டிய மன்னன், காசி விஸ்வநாதருக்கு பிரமாண்டமானதொரு கோயிலை எழுப்பினான்.

இன்றைக்கும் பராக்கிர பாண்டிய மன்னன் காலத்து கல்வெட்டுகளைக் காணலாம். தென்காசிக்கு அருகில் சாம்பவர் வடகரை எனும் ஊருக்கு அருகில் உள்ளது விந்தன்கோட்டை. இங்கே உள்ள கோட்டையில் இருந்து கொண்டுதான் பராக்கிரம பாண்டிய மன்னன், ஆட்சி செய்து வந்தான் என்கிறது வரலாறு.

பராக்கிரம பாண்டிய மன்னன், தீவிரமான சிவபக்தன். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்து பூஜித்துக் கொண்டிருந்தான். காசியம்பதி என்கிற புண்ணிய க்ஷேத்திரத்துக்குச் சென்று வழிபட்டுவந்தான். அதுவும் எப்படி? விந்தன்கோட்டையில் இருந்து வான்வழியே அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் காசியம்பதிக்குப் பறந்து சென்று சிவனாரைத் தரிசிப்பார் என்று சொல்லப்படுகிறது.

பறக்கும் பாய், பறக்கும் தட்டு என்றெல்லாம் அப்போது இருந்ததா? அல்லது பக்தியில் திளைத்தவனுடைய தேர்களுக்கு, சிவனருளால் றெக்கைகள் முளைத்தனவா? தெரியவில்லை. அதனால்தான் அவனுக்கு பராக்கிரமன் எனும் பெயர் அமைந்ததோ என்னவோ?

இப்படியாக மன்னர், காசி விஸ்வநாதரை தரிசிப்பது இருந்து வந்தது. ஒருநாள், மன்னரின் மனைவிக்கும் காசிக்குச் செல்லவேண்டும், விஸ்வநாதரைத் தரிசிக்கவேண்டும் எனும் ஆசை! மன்னரிடம் தெரிவித்தார். அதன்படி, மகாராணியையும் அழைத்துச் சென்றார் மன்னர். இருவரும் விஸ்வநாத சுவாமியைத் தரிசித்தனர்.

இந்தமுறை காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றையும் எடுத்து வந்தார் மன்னர். வழியில், மகாராணி மாதவிலக்கானாள். வழியில் அடர்ந்த நந்தவனச் சோலையில் தங்கினார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு, மீண்டும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஆனால், காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்தை நகர்த்தவோ அசைக்கவோ முடியவில்லை. மன்னர் பதைபதைத்துப் போனார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்றார். கண்ணீர் விட்டு கதறினார். அரண்மனைக்குக் கொண்டு செல்லவேண்டுமே என பர பரத்தார். அப்போது, அசரீரி கேட்டது. ‘இந்த லிங்கம் இங்கேயே இருக்கட்டும்’ என அறிவிப்பு வந்தது. அதன்படி, அந்த நந்தவனத்திலேயே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்புவது என உறுதியெடுத்தார். கோயில் எழுப்பினார். அந்தத் தலம்... சிவகாசி என்று இன்றைக்கும் அழைக்கப்படுகிறது.

சிவகாசியில் கோயில் எழுப்பிய மன்னனுக்கு ‘இப்படியொரு லிங்கத்துடன் இங்கே நாம், ஒரு கோயில் கட்டவேண்டும். ’இதைவிட பிரமாண்டமாக கோயில் கட்டவேண்டும். அந்த சிவலிங்கத்துக்கு காசி விஸ்வநாதர் என்றே பெயர் சூட்டவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே இருந்தார்.

ஒருநாள்... மன்னரின் கனவில் சிவனார் தோன்றினார். ‘உன்னுடைய கோட்டையில் இருந்து கட்டெறும்புகள் வரிசையாக ஊர்ந்து செல்லும். அந்த எறும்புவரிசை நிற்கும் இடத்தில், சிவலிங்கம் இருக்கிறது. அதைக் கொண்டு கோயில் எழுப்பு’ என அருளினார். அதன்படி, எறும்புவரிசைக்குக் காத்திருந்தார் மன்னர். எறும்புகள் கோட்டைக்குள் வந்தன. ஊர்ந்தன. வரிசையாக அணிவகுத்துச் சென்றன. மன்னர், எறும்புகளைப் பின் தொடர்ந்தார். எறும்புகள், சிற்றாற்றின் கரைக்குச் சென்றன. செண்பகத்தோட்டத்தில் நின்றன. அங்கே அழகிய, பிரம்மாண்ட சிவலிங்கத் திருமேனியைக் கண்டு சிலிர்த்துப் போனார் பராக்கிரம மன்னர். ‘என் சிவம் என் சிவம்’ என்று உச்சந்தலையில் கைகுவித்து, சிவலிங்கத்தைச் சுற்றிச்சுற்றி வந்தார். அங்கே... பிரமாண்டமாகக் கோயில் எழுப்பினார். வடக்கே உள்ள காசிக்கு நிகரானதாகப் போற்றப்படும் அந்தத் தலம்தான் தென்காசி!

மிகப்பிரமாண்டமான ஆலயம். ஏராளமான கல்வெட்டுகளையும் குறிப்புகளையும் சரித்திர சாட்சிகளாக தாங்கிக்கொண்டிருக்கிறது தென்காசி. சிவபெருமானுக்கு மன்னர்கள் வழங்கிய நிலங்கள், தோப்புகள், ஆபரணங்கள், நில எல்லைகள், அவற்றின் மூலம் கிடைக்கக் கூடிய வருமானங்கள் முதலானவை அனைத்துமே கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்டுள்ளன. நெல்லையம்பதியில் நெல்லையப்பர் கோயில் போல அங்கிருந்து முக்கால்மணி நேரப் பயணத்தில் வந்தடைகிற தென்காசியும் அதிசயிக்கக் கோயில்தான்!

குற்றாலத்துக்கு வருவதற்கு தென்காசியைக் கடந்துதான் செல்லவேண்டும். இங்கே உள்ள பரோட்டக் கடைகள் இரண்டு மூன்று தலைமுறைகளாகப் பிரபலம். தென்காசி விஸ்வநாதர் கோயில் ஆயிரம் தலைமுறை, லட்சம் தலைமுறைகளுக்கு முந்தையது என்பதே, தென்காசி எனும் ஊரை இன்னும் இன்னும் அழகாக்கி, அற்புதமாக்கிவிடுகிறது!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow