“இந்த ஆதாரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” – சர்க்காரியா கமிஷனை கையில் எடுத்த விஜய்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்களை முன்வைத்து திமுகவை கடுமையாக விமர்சித்தார். 

Sep 7, 2026 - 10:52
“இந்த ஆதாரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” – சர்க்காரியா கமிஷனை கையில் எடுத்த விஜய்..!

தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். 

அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், 1970-களில் திமுக ஆட்சியில் நடைபெற்ற வீராணம் திட்டத்திற்கான டெண்டர் விவகாரத்தை குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார். திமுக ஆட்சிக் காலத்தி டெண்டர் பெறுவதற்காக கமிஷன் கேட்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களை பேரவையில் முன்வைத்தார் விஜய்.

மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விவகாரத்தில் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களையும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் இருப்பதாகக் கூறிய விஜய், தான் பேசுவது தனது சொந்த குற்றச்சாட்டு அல்ல என்றும், அமலாக்கத்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களையே குறிப்பிடுவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், திமுகவின் அரசியல் பாரம்பரியம் மற்றும் சீனியாரிட்டி குறித்து பேசுபவர்கள், சர்க்காரியா கமிஷன் தொடர்பான ஆவணங்களை படிக்க வேண்டும் என்றும் விஜய் கூறினார். அந்த ஆவணங்கள் சட்டப்பேரவை நூலகத்திலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“கட்சி நிதியிலும் முறைகேடா?”

தொடர்ந்து திமுகவுக்கு கிடைத்ததாகக் கூறப்படும் கட்சி நிதி குறித்தும் விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமலாக்கத்துறை ஆவணங்களில் திமுகவுக்கு 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி கிடைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரடி பயனாளிகளாக இருந்ததாகவும் விஜய் கூறினார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும், அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் விவகாரங்களில் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார்.

மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்ட ரத்தீஷ் என்பவர் துபாயில் இருப்பதாகக் கூறி, அவர் ஏன் அங்கு தலைமறைவாக இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

“குடும்பமாகவே தவறு செய்கிறார்கள்”

திமுகவை குடும்ப அரசியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்த விஜய், அக்கட்சியில் எதை செய்தாலும் குடும்பமாகவே செய்வார்கள் என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், முறைகேடுகளையும் திட்டமிட்டு செய்யும் வகையில் ‘விஞ்ஞான ஊழல்’ நடைபெறுவதாக அவர் குற்றம்சாட்டினார். மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்பட்டதாகக் கூறிய விஜய், இந்த முறைகேடுகளும் ஒரு முறையான நடைமுறையாக மேற்கொள்ளப்பட்டதாக விமர்சித்தார்.

தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வேண்டும் என தொடர்ந்து கேட்பவர்களை குறிப்பிட்ட விஜய், “இப்போது ஆதாரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்ற தொனியில் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, ஊழல் செய்வோர்தான் ஆதாரம் கேட்பார்கள் என்றும், தவறு செய்யாதவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்றும் கூறி திமுகவை கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவையில் விஜய் முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow