"பார்ட்டி ஃபண்டு வாங்கியதே ஸ்டாலின் & உதயநிதி தான்..." – பேரவையில் கொந்தளித்த விஜய்..!
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான பதில் அளித்து வரும் நிலையில், திமுக மீது தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.
தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்து கொண்டிருக்கிறார்.
அப்போது பேரவைக்குள் திமுகவினர், தன்னை நோக்கி எலும்பு முறியும் எனக் கூறும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளதாக விஜய் தெரிவித்தார். இதுபோன்ற செயல்பாடுகளை பார்த்துதான் மக்கள் திமுகவை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என திமுகவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் பேசியதாக குறிப்பிட்ட விஜய், 50 முதல் 60 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதுபோன்று பேசுவது சரியா? என கேள்வி எழுப்பினார்.
“பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் ஸ்டாலின், உதயநிதி முக்கியமானவர்கள்”
தொடர்ந்து திமுக ஆட்சிக்காலத்தில் கட்சிக்கு நிதி பெறப்பட்ட விவகாரம் குறித்தும் விஜய் பேசினார். பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் முக்கியமானவர்கள் என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், திமுக ஆட்சியில் கட்சிக்கு நிதி பெறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை அமலாக்கத்துறை (ED) உறுதிப்படுத்தியுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார்.
டாஸ்மாக் துறையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், ரத்தீஷ் என்பவரின் பேச்சைக் கேட்டுதான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே செயல்பட்டதாகக் கூறிய விஜய், “யார் அந்த ரத்தீஷ்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் விஜய் முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டுகள் தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
What's Your Reaction?