விஜயை விமர்சித்த சேகர்பாபு, ஆ.ராசா...ஆக்‌ஷனில் இறங்குமா தவெக அரசு?

முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சேகர்பாபு மற்றும் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Sep 15, 2026 - 11:45
விஜயை விமர்சித்த சேகர்பாபு, ஆ.ராசா...ஆக்‌ஷனில் இறங்குமா தவெக அரசு?

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சியில் எழுந்ததாகக் கூறப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்கள் உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு, திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், மிசா குறித்து பேசும்போது, மு.க. ஸ்டாலினை சைகை மூலம் கேலி செய்யும் வகையில் விஜய் உடல்மொழியை வெளிப்படுத்தியதாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக முதலமைச்சர் விஜயை கண்டித்து, திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 13.09.2026 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுமுதலமைச்சர் விஜயை நோக்கி "ஓடுகாலி நாயே" என்று ஒருமையில் மிகக் கடுமையான ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தார். அத்துடன், மிசா (MISA) சட்டம் குறித்தும், சிறைவாசம் குறித்தும் விஜய் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "சிறைக் கதவுகளைக் கூட பார்க்காதவர்களுக்கு மிசா பற்றி பேச தகுதியில்லை" என்றும், தங்களைத் தேடி வரும் சண்டையை எதிர்கொள்ள தங்களுக்குத் தெரியும் என்றும் சவாலாகப் பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் திமுகவுக்கும் சேகர்பாபுவுக்கும் எதிராக கண்டனங்களை பதிவு செய்தன.

இதனைத் தொடர்ந்து, திமுக எம்.பி. ஆ.ராசா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா, முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்ததுடன், அமைச்சர் நிர்மல்குமாரின் தாயார் குறித்து பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதிப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், முதலமைச்சர் விஜய் குறித்து பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீதும் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேகர்பாபு மற்றும் ஆ.ராசா மீது அடுத்தகட்டமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow