கேரளத்தில் தவெக...பாஜகவின் முக்கிய விக்கெட்டை தூக்கிய விஜய்!

கேரளாவில் த.வெ.க.வின் அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில், நடிகர் தேவன் இணைப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 30, 2026 - 14:00
Aug 29, 2026 - 14:02
கேரளத்தில் தவெக...பாஜகவின் முக்கிய விக்கெட்டை தூக்கிய விஜய்!

'இந்தியாவின் பிரதமராவார் எங்கள் தளபதி' என்று தமிழக அமைச்சர்கள் பட்டாசு கொளுத்தி கூட்டணிக்கு உள்ளேயே எரிமலையை வெடிக்கவைத்துள்ளனர். அதற்கேற்ப, தமிழகத்தைத் தாண்டி கேரளத்தில் த.வெ.க.வுக்கு ஒரு வலுவான கட்டமைப்பை விஜய் அமைக்கத் தொடங்கியிருப்பது தென்னிந்திய அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் த.வெ.க. மெகா வெற்றியை பெற்றதும் கேரள எல்லை மாவட்டமான பாலக்காட்டில் விஜய் ரசிகர்கள் வெற்றி ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இதை அம்மாநில காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் 'இங்கே எதுக்குடா கூத்தாடுறீங்க?' என்று நக்கலாக விமர்சித்தனர். ஆனால், அதே மாதத்தில் கேரளாவிலும் தவெகவின் கிளையைத் தொடங்கினார் விஜய். இதற்காக, திருச்சூரில் மிகப்பெரிய கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமல்லாது நடுத்தர வயதினரும் மிக ஆர்வமாக இதில் கலந்துகொண்டு உறுப்பினராகினர். த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ உறுப்பினர் செயலியில் மலையாள மொழியும் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் திடீர் அதிரடியாக கேரள பா.ஜ.க.வின் துணைத் தலைவரான நடிகர் தேவனை தங்கள் பக்கம் இழுத்து, பரபரப்பை பற்ற வைத்துள்ளது த.வெ.க. 'பிரதமராவார் தளபதி எனும் கோஷம் எழுந்துள்ள சூட்டோடு விஜய் இதை செய்திருப்பதன் மூலம் அடுத்தடுத்து தென்னிந்திய மாநிலங்கங்களில் தனது அரசியலை விரிவுபடுத்தி, 2029க்குள் த.வெ.க.வை தேசியக் கட்சியாக நிலை நிறுத்தும் முடிவில் அவர் இருக்கிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

விஜய்யின் இலக்குதான் என்ன என்று அரசியல் விமர்சகர்களிடம் கேட்டோம். "விஜய் தொட்டதெல்லாம் பொன்னாகிக்கொண்டிருக்கும் நிலையில், முடிந்தவரையில் உச்சம் தொட்டுவிடுவது எனும் மனநிலையில் இருக்கிறார். அதற்கேற்ப மத்தியிலும் கொடி நாட்டிட சில அதிகார மையங்கள் விஜய்யை உசுப்புகின்றன. அதைத் தொடர்ந்துதான் அமைச்சர்கள் ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி உள்ளிட்டோருக்கு 'தளபதிதான் அடுத்த பிரதமர்' என்றெல்லாம் பேச சொல்லி அசைன்மெண்ட்கள் வந்தன. அவர்களும் பேசினார்கள்.

2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தென்னிந்திய மாநிலங்கள் முழுக்கவே தன் கட்சியை விரிவுபடுத்தி, பரவலாக எம்.பி. சீட்களை வென்றே தீர வேண்டும் என்பதே விஜய்யின் இலக்கு. இதன்மூலம் பிரதமர் பதவி ரேஸில் ஆட்டம் காட்டலாம் என பிளான் பண்ணுகிறார். இதற்காக தமிழகம் தாண்டி விஜய் முதலில் கையில் எடுத்துள்ளது கேரளத்தைத்தான். காரணம், தமிழகத்துக்கு அடுத்தபடியாக கேரளத்தில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் படை இருக்கிறது. 'ஆல் கேரளா விஜய் ஃபேன்ஸ் அசோசியேஷன்' அமைப்பின் மூலம் அவரின் கேரள ரசிகர்கள் ஏற்கெனவே ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறார்கள்.

விஜய் படம் ரிலீஸாகும்போது பிரமாண்ட கட் அவுட் வைப்பது, சிலை வைப்பது போன்ற ரசிக செயல்பாடுகள் மட்டுமின்றி வெள்ளம், நிலச்சரிவு சமயங்களில் மக்களுக்கு நிவாரணம் கொடுப்பது வரை ஏற்கனவே மக்களிடம் அறிமுகமாகி, நல்ல பெயரையும் வாங்கி வைத்துள்ளனர்.  அதனால்தான் தமிழகத்தில் வெற்றிபெற்ற உடனேயே கேரளத்தில் கட்சிக்கான அடித்தளத்தை தொடங்கினார் விஜய், கடந்த மூன்று மாதங்களில் மிக கணிசமான உறுப்பினர்கள் கேரள த.வெ.க.வில் இணைந்துள்ளனர். அடித்தளம் உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது இப்போது அம்மாநிலத்தில் ஈர்ப்பான ஒரு முகத்தை வைத்து கட்சியைக் கட்டி எழுப்பும் வேலையை தொடங்கியுள்ளனர்.

அதற்காக கேரளத்தில் பிரபலமான நபர்களை த.வெ.க.வுக்கு இழுக்கும் வேலைகள் ஜரூராக தொடங்கப்பட்டுள்ளன. அதில் விழுந்த முதல் விக்கெட்தான், கேரள பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவராக இருந்த நடிகர் தேவன். விஜய்யுடன் 'ஷாஜகான்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவர், விஜய்க்கு நன்கு அறிமுகமானவரும்கூட. பா.ஜ.க.வில் இருந்து கடந்த ஆகஸ்ட் 16 அன்று விலகியுள்ள தேவன், செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் விஜய்யை சந்தித்து த.வெ.க.வில் இணைகிறார். அவருக்கு முக்கியப் பதவியும் தரப்படவிருக்கிறது.

அதன்பின் கேரளத்தில் த.வெ.க.வை தீவிரமாக வளர்த்தெடுப்பதுடன் மக்களுக்கு மிக அறிமுகமான மலையாள நடிகர், நடிகைகளை த.வெகவில் இணைக்கும் அசைன்மென்ட்டும் தேவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக சாதாரண மனிதர்கள் திடுதிப்பென த.வெ.க.வால் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என விஸ்வரூபமெடுத்துள்ளதை கண்டு கேரள பிரபலங்களும் பரவசமாகியுள்ளனர். தங்கள் மாநிலத்திலும் விஜய் அந்த மேஜிக்கை நிகழ்த்துவார் என அவர்கள் நம்புகின்றனர். அதனால் தேவன் இணைப்பை தொடர்ந்து அம்மாநிலத்தில் அரங்கேறவுள்ள நிகழ்வுகளால் கேரள அரசியலில் த.வெ.க. பெரிய புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள் மாநிலத்திலும் விஜய் இப்படி திடீர் சுனாமியாக மாறுவார் என்று அம்மாநிலத்தை மாற்றி மாற்றி ஆளும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மட்டுமல்ல, பாஜகவும் எதிர்பார்க்கவில்லை. விஜய்யால் தமிழகத்தில் அ.தி.மு.க. அட்ரஸ் இல்லாமல் போய்க்கொண்டிருப்பதையும், 75 ஆண்டு பாரம்பரிய தி.மு.க. இப்போது திணறுவதையும் பார்த்து தங்களுக்கும் அப்படியொரு நிலை வந்துவிடக் கூடாது என்று பதறுகிறார்கள். அதன்வெளிப்பாடாக தற்போதே விஜய் புயலை எப்படி சமாளிப்பது என்று தங்கள் கட்சி முக்கியப் புள்ளிகளுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர். கேரளத்தில் த.வெ.கவை வலுப்படுத்தும் கையோடு அடுத்து தனக்கு ரசிகர் படை இருக்கும் ஆந்திராவில் கால் வைக்கும் முடிவிலும் உள்ளார் விஜய்" என்று முடித்தனர்.

நாம் தேவனிடம் பேசியபோது "த.வெ.க.வில் இணைவதற்காக பா.ஜ.க.வை விட்டு விலகவில்லை. இது கொள்கை சார்ந்த முடிவு, கடந்த 2004ல் நான் முன்வைத்த அரசியல் கொள்கைகளும், தற்போது முதல்வர் விஜய்யின் கொள்கைகளும் விரைவில் ஒன்றுபடப் போகின்றன. செப்டம்பர் 10ல் சென்னை வருகிறேன். மற்றவை அதன்பின்" என்றார்.
வரூ... வரூ!'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow