Vijayakanth : கேட்பன் நிகழ்ச்சியில் எட்டிப் பார்த்த பிரபலத்திற்கு எக்கச்சக்க வரவேற்பு! அஞ்சலி நிகழ்ச்சியா இது?
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடத்தப்பட்ட இசை அஞ்சலி நிகழ்ச்சியில் விஜயகாந்த் போல் வேடமிட்டு வந்தவரை தொண்டர்கள் ஆராவாரத்துடன் வரவேற்ற சம்பவம் அரங்கேறியது.
மறைந்த தேமுதிக தலைவரும், கேப்டன் என்று அழைக்கப்படுபவருமான விஜயகாந்துக்கு மாவட்டம்தோறும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் விஜயகாந்த் பாடல்களைப் பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் தேமுதிக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில், விஜயகாந்த்தின் புகழ்பெற்ற பாடல்களை கலைஞர்கள் பாடினர். அப்போது விஜயகாந்த் வேடமிட்ட நபர் ஒருவர் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். கூடியிருந்த கூட்டத்துக்கு மத்தியில் விஜயகாந்த் வேடமிட்டவர் வரவும், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். ஏதோ விஜயகாந்தே நிகழ்ச்சிக்கு வந்து விட்டதாக நினைத்துக் கொண்ட தொண்டர்கள், பக்திப் பரவசத்தில் செல்ஃபி எடுத்தும், கைகுலுக்கியும் வரவேற்றனர். அதில் ஒருவர் உச்சகட்டத்துக்கு சென்று அவர் காலில் விழுந்து வணங்கி வரவேற்றார்.
இதற்கெல்லாம் நடுவில் விஜயகாந்த் போலவே வேடமிட்டிருந்த நபரோ, முக பாவனைகளும் அபிநயங்களும் காட்டி விஜயகாந்தாகவே வாழ்ந்தபடி அந்த வரவேற்புகளை ஏற்றுக் கொண்டார். தொண்டர்களும் தங்கள் தலைவருக்குச் செய்வதாகவே நினைத்துக்கொண்டு இவருக்கு மரியாதைகளைச் செய்தனர்.
பின்னர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஒளிபரப்பப்பட்ட பாடலைக் கலைஞர்கள் பாட, மேடையில் விஜயகாந்தாக நின்றவரும், கீழே விஜயகாந்துக்காக நின்றவர்களும் கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்ந்தனர். அதுவரை, வந்தவருக்கு கிடைத்த வரவேற்பில் அஞ்சலி நிகழ்ச்சியா இது என்றபடி பார்த்த மக்கள், கடைசியில் கண்ணீர் ஜோதியில் ஐக்கியமானார்கள். அங்கிருந்தவர்கள் செல்போனில் டார்ச் அடித்து தங்கள் ஆதரவையும் அஞ்சலியையும் நூதனமான முறையில் வெளிப்படுத்திய சம்பவமும் அரங்கேறியது.
What's Your Reaction?