விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்: மூலமந்திரம் சொல்லி ஆனைமுகனை வணங்குவோம்!

விநாயக சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட்டு, கணபதியின் மூலமந்திரத்தை ஜபிப்பதன் சிறப்புகள் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Sep 13, 2026 - 07:00
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்: மூலமந்திரம் சொல்லி ஆனைமுகனை வணங்குவோம்!
vinayagar chaturthi

- வி.ராம்ஜி

எந்தத் தெய்வத்தை நினைத்து பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாருக்குத்தான் பூஜை செய்வோம். எந்தக் கடவுளுக்கு ஹோமங்கள் செய்தாலும் முதலில் பிள்ளையாரை பூஜித்து அழைத்து அமரவைத்ததை அடுத்துதான் முக்கியாமான ஹோம பூஜைகளைத் தொடங்குவோம்! அப்போது பூஜைக்கு, பிள்ளையார் சிலை இருக்க வேண்டும் என்றில்லை.  

ஒரு மஞ்சளில் கூட பிள்ளையாராக பாவித்து பிடித்து வைத்து பூக்களால் அர்ச்சித்து வழிபட்டாலே, அந்த பூஜையில் கணங்களுக்கு அதிபதியான பிள்ளையார், அமர்ந்து கொள்வதாக ஐதீகம் என்று வேதிக் விஜய் சர்மா.
சில பண்டிகைகள், சில மாநிலங்களில் மட்டும் கொண்டாடப்படும். தைப்பூசம் நம் தமிழ்நாட்டில் கோலாகலமாக நடைபெறும். ஆனால் சில பண்டிகைகள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகின்றன. அப்படி வடக்கு தெற்கு என்கிற பாகுபாடுகள் இல்லாமல் கொண்டாடப்படும் பண்டிகை விநாயக சதுர்த்தி. ஆவணி மாதத்தில் அமாவாசையை அடுத்து வளர்பிறை காலத்தில் வருகிற நான்காம் நாள் விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடுகிறோம்.
’’கணங்களின் நாயகன் விநாயகர். அதனால்தான் கணபதி என்கிறோம். நம் வினைகளையெல்லாம் தீர்ப்பவர்... அதனால்தான் விநாயகர். விக்ன விநாயகரே உன் பாதம் போற்றி என்கிற பாடலும் இதனால்தான் உருவானது. எந்தவொரு விஷயத்தை எழுதினாலும் அதில் முதலாவதாக பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டுத்தான் எழுதுவோம்.
இப்படியாக நாம் செய்யும் எல்லாச் செயலும் பிள்ளையாரை முதன்மைப்படுத்தியே இருக்கின்றன. பிள்ளையாருக்கு முதல் வணக்கம் செய்த பின்னரே அடுத்தடுத்த வழிபாடுகள் செய்யப்படுகின்றன’’ என விவரிக்கிறார் வேதிக் விஜய் சர்மா. விநாயகருக்கான மூலமந்திரத்தை ஜபித்து பிள்ளையாரை வணங்கினால், சகல சுபிட்சங்களும் நம்மை வந்தடையும். காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் அகலும்.
கணபதியின் மூலமந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கணபதயே வர வரத
ஸர்வ ஜன மே வசமாநாயா ஸ்வாஹ:
இந்த மந்திரத்தை, பிரம்ம முகூர்த்த வேளையில், அதாவது அதிகாலை சூரியோதயத்துக்கு முன்னதாக ஜபித்து வருவது நல்லது. அதேபோல் சங்கடஹர சதுர்த்தி நாள், ஞாயிற்றுக்கிழமை என நாம் தொடர்ந்து சொல்லி வந்தால், அளப்பரிய பலன்களைப் பெறலாம். தினமும் 108 வீதம் ஜபம் சொல்லி, ஒருலட்சம்,ஐம்பது லட்சம் என இந்த மந்திரத்தை உருவேற்றுகிற பக்தர்களும் இருக்கிறார்கள்.
விநாயக சதுர்த்தி நாளில், குறைந்தபட்சம் 1008 முறை மூலமந்திரத்தை ஜபித்து, விநாயகருக்கான பூஜை செய்தால், நம் வீட்டில் உள்ள குழந்தைகள் கல்விகேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள். இசை, கலை முதலானவற்றில் ஜொலிப்பார்கள்.
அதேபோல், விநாயக சதுர்த்தி நாளில், புதிதாக நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் வெற்றியைத் தந்து காத்தருளுவார் பிள்ளையாரப்பன். மேலும் ஆவணி மாதத்தை அடுத்து புரட்டாசி மாதம் வந்துவிடுவதால், திருமணம் முதலான சுபகாரியங்களையும், கடை, வியாபாரம், தொழில் முதலான பொருளாதார விஷயங்களையும் ஆவணி வளர்பிறையில் வருகிற விநாயக சதுர்த்தி நன்னாளில் தொடங்குவதைத் திட்டமிடுகிறவர்கள் ஏராளம்.
இந்த நாளில், கணபதி ஹோம நியமங்கள் செய்தும் சிதறுகாய் உடைத்தும் வேண்டிக்கொண்டு வேலையைத் தொடங்கினால், முதற்கடவுளான பிள்ளையார், நம்மை முழுமைக்குமாக இருந்து காத்தருளுவார் என்பது ஐதீகம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow