"இந்துக்கள் 2-3 குழந்தைகள் இருக்க வேண்டும்.." – விஷ்வ இந்து பரிஷத் வேண்டுகோள்.. காரணம் என்ன?

ஒவ்வொரு இந்து குடும்பத்திலும் இரண்டு முதல் மூன்று குழந்தைகள் இருக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அகில உலக அமைப்பாளர் மிலிந்த் பரண்டே பேட்டியளித்துள்ளார்.  

Sep 5, 2026 - 19:30
Sep 5, 2026 - 17:29
"இந்துக்கள் 2-3 குழந்தைகள் இருக்க வேண்டும்.." – விஷ்வ இந்து பரிஷத் வேண்டுகோள்.. காரணம் என்ன?

சென்னை விமான நிலையத்தில் விஸ்வ இந்து பரிஷத் அகில உலக அமைப்பாளர் மிலிந்த் பரண்டே  செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, ”கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து நிலவரங்களை அறிந்தேன். தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதோடு பெருமளவில் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 ஆவது பிரிவு மதத்தைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை அளிக்கிறது. ஆனால் கட்டாய மதமாற்றத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆசை வார்த்தைகளைக் கூறியோ பயமுறுத்தியோ மதமாற்றம் செய்வது சட்டவிரோதமானது.

எனவே உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் கடுமையான மத சுதந்திரச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியைக் கொண்டு இங்கு மதமாற்ற நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பதையும் ஆராய வேண்டும். அவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகள் இருப்பது தெரியவந்தால் வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வழிபடும் தமிழ்நாட்டில் நந்தி பகவான் வழிபாட்டிற்குரியவராக உள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கும் கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கும் சட்டவிரோதமாக பசுக்கள் மற்றும் கன்றுகள் கடத்தப்படுகின்றன இதனைத் தடுக்க மாநில எல்லைகளில் கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைத்து பசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இளைஞர்களையும் குழந்தைகளையும் சீரழிக்கும் போதைப்பொருட்களுக்கு எதிராக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கடந்த 5 முதல் 6 மாதங்களில் நாடு முழுவதும் 7500 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

கடல் எல்லையைக் கொண்ட தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் இளைஞர்களைப் பாதுகாக்கவும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

கோயில்களில் செல்போன்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு ரூபாய் 5 கட்டணம் வசூலிப்பது சரியல்ல அதனை இலவச வசதியாக வழங்க வேண்டும்.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய கோரிக்கையே இந்து கோயில்களை அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்பதுதான். எந்த தேவாலயமோ, மசூதியோ அரசின் கட்டுப்பாட்டில் இல்லை இந்து கோயில்கள் மட்டுமே அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே கோயில்களை இந்து சமூகத்திடமே ஒப்படைக்க வேண்டும். கோயில் சொத்துகளும் நிதியும் இந்து சமயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 1.3 ஆகக் குறைந்துள்ளது இது கவலை அளிக்கும் விஷயமாகும். எனவே தமிழ்நாட்டிலும் பாரதத்தின் பிற மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு இந்து குடும்பத்திலும் குறைந்தது 2 முதல் 3 குழந்தைகள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என இவ்வாறு கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow