தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு நிறைவு: கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு பதிவாக சாதனை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலை காட்டிலும் இந்த முறை கூடுதல் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள்.
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. 11 மணி நிலவரப்படி 37.56% ஓட்டுப்பதிவானது. மதியம் 1 நிலவரப்படி 56.81 சதவிகிதம் வாக்கு பதிவானது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 70 சதவிகித வாக்குகள் பதிவானது.
மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்த வாக்காளர்கள் டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். 2021 சட்டமன்ற தேர்தலை விட இந்த முறை கூடுதல் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளது அரசியல் கட்சிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.
What's Your Reaction?