கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு......'நான் கண்ட கவியரசர்!
திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடி பாடல்களைப் பாடிய கவியரசு கண்ணதாசனின் எளிமை, நகைச்சுவை, இலக்கிய ஆளுமை மற்றும் பின்னர் அவருடன் நிகழ்ந்த மறக்க முடியாத சந்திப்புகளை எழுத்தாளர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.
திருப்பூர் கிருஷ்ணன் :
திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரியில் நான் தமிழ் இளங்கலை பயின்றுகொண்டிருந்த காலகட்டம். அதே கல்லூரியில் என்னுடன் பயின்ற சூலூர் தனபால், டிப்டாப் முருகேசன் புதல்வர் கிருஷ்ணமூர்த்தி, கதிர்வேல் உள்ளிட்ட நண்பர்கள் எல்லோருமே கண்ணதாசனின் பரம ரசிகர்கள்.
அனைவருக்குமே கண்ணதாசனை ஒருமுறையாவது நேரில் பார்க்கும் ஆவல். அவரைக் கல்லூரித் தமிழ் மன்றத்திற்குப் பேச அழைத்தால் ஆவல் நிறைவேறிவிடும்.
அப்போது சிக்கண்ணா கல்லூரி முதல்வராக இருந்தவர் தமிழறிஞர் கா.மீனாட்சிசுந்தரம். கண்ணதாசனைச் சென்னையிலிருந்து வரவழைத்து உரிய சன்மானம் கொடுக்க அதிகச் செலவாகுமே என்று யோசித்தார் அவர். செலவில் மாணவர்களும் பங்களிக்கிறோம் என்றதும் உடன்பட்டார்.
கண்ணதாசனின் உதவியாளருக்குக் கடிதம் எழுதித் தேதி வாங்கப்பட்டது. வேறொரு கூட்டத்திற்குக் கோவை செல்லும் வழியில் திருப்பூருக்கும் வருவார். ஒரு மணி நேரத்திற்கு மேல் அவரால் கல்லூரியில் செலவிட இயலாது' என்று சொல்லப்பட்டது. குறிப்பிட்ட தினத்தன்று அவர் காரில் மதியம் இரண்டு மணியளவில் வந்து சேர்ந்தார். 'குமரன் கூடம்' என்று பெயரிடப்பட்ட அரங்கில் மேடையில் அமர்ந்தார்.
குங்குமப் பூ நிறம். முழு நிலவைப் போன்ற வட்ட முகம். வெண்விழிகளிடையே பளபளக்கும் நாவல் பழம் போன்ற கருவிழிகள். (கோப்பையிலே என் குடியிருப்பு, 'பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது' போன்ற பாடல் காட்சிகளில் காணப்படும் தோற்றம் அவரின் முழுமையான அழகைப் புலப்படுத்தவில்லை.)
கள்ளங்கபடமில்லாத அவரது பாவனைகள் யாரையும் வசீகரிக்கக் கூடியவை. ஓர் அழகான குழந்தை சடாரென வளர்ந்து நாற்காலியில் அமர்ந்த மாதிரி இருந்தது!
பேராசிரியர் ஒருவர் வரவேற்புரையில் அவரைப் புகழ்ந்து தள்ளினார். புகழ்ச்சியை விரும்பாத கண்ணதாசன் மேடையிலிருந்து இறங்கி, மாணவர்களிடையே வந்து உட்கார்ந்து கொண்டுவிட்டார்.
பேராசிரியர் பேச்சை முடித்த பின்னும் கவிஞர் மேடைக்குச் செல்லாமல், மாணவர்களிடையே எழுந்து நின்று பேசலானார். தங்குதடை இல்லாத அவரது சொற்பெருக்கில் அனைவரும் மயங்கிக் கரைந்தோம். எங்களை மறந்து அவரைச் சுற்றி எல்லோரும் எழுந்து நின்றுகொண்டோம். அவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த பாடகரும்கூட! அவர் மட்டும் பாட்டுத் துறையில் இறங்கியிருந்தால், டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸ் மாதிரி ஒரு பாடகராகவும் புகழ்பெற்றிருப்பார்.
தாம் எழுதிய பாடல்களையும் சூழ்நிலைகளையும் விளக்கிப் பேசிய அவர், பாடல்களைக் காதுகுளிரப் மெல்ல பாடவும் செய்தார். மெல்ல அந்தக் கூட்டம் நேயர் விருப்பக் கூட்டமாக மாறிவிட்டது. 'பார்த்தேன் சிரித்தேன், அத்திக்காய் காய்' என்றெல்லாம் மாணவர்கள் ஒவ்வொரு பாட்டாகப் பாடச் சொல்லிக் கேட்க,அருகிலிருந்த மாணவர்களின் தோள்மேல் கைபோட்டவாறு சுகமாகப் பாடிக் கொண்டே இருந்தார், கவிஞர்.
மாலை, மணி நான்கைத் தாண்டிவிட்டது. ஒரு மணி நேரம் மட்டும்தான் கல்லூரியில் இருப்பார் என்று சொல்லப்பட்ட நிபந்தனை காற்றில் பறந்தது. உதவியாளர் நேரமாவதை அறிவுறுத்தியும் அதைக் கேட்கும் நிலையில் கவிஞர் இல்லை! பிறகு, மாணவர்களோடு பேசியவாறே கல்லூரி வாயிலுக்கு நடந்து வந்து காரில் ஏறினார். மாணவர்கள் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பிரியா விடை கொடுத்தனர். இது மாணவர்களில் ஒருவனாக அவரை நான் பார்த்த சந்தர்ப்பம். பின்னர் கவியரசரைத் தனியாகச் சந்திக்கும் சந்தர்ப்பங்களும் என் வாழ்வில் நேர்ந்தன.
அவர் காலமாவதற்குச் சிறிது காலம் முன்னால், சென்னையில் ஓர் உணவகத்தில் மதிய நேரம் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது நானும் தீபம் நா.பார்த்த சாரதியும் உணவருந்த அங்கு சென்ற போது, அவரைச் சந்தித்தோம். அவர் தளர்ந்திருந்தார். 'உடல் தளர்ந்திருக்கிறதே? மதுப் பழக்கத்தின் விளைவாக இருக்குமோ? என்று உரிமையோடு அவரிடம் சொன்னார் நா.பா. (கண்ணதாசன், ஜெயகாந்தன், சோ, நா.பா. எல்லோரும் காமராஜ் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸில் பேச்சாளர்களாக இயங்கிக்கொண்டிருந்தவர்கள்)
அதற்குக் கண்ணதாசன் நா.பா. வைப் பார்க்காமல் மெல்லிய முறுவலோடு என்னைப் பார்த்து, "தம்பி! நானும்கூட மதுவிலக்குக் கொள்கைக்குத் தீவிர ஆதரவாளன் தான்!" என்றார். 'அது எப்படி?" என்று வியப்போடு கேட்டேன். உலகிலுள்ள மதுவையெல்லாம் குடித்தே ஒழித்துவிட முயல்கிறேன். முடியவில்லையே!' என்றார் அவர்.
நான் பணிபுரிந்த தினமணிகதிர் வார இதழில் ஆசிரியர் சாவியின் வேண்டுகோளின் பேரில் 'அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புகழ்பெற்ற தொடரை எழுதினார்.
அவரிடம் இப்படி எழுதும் நீங்கள் ஒருகாலத்தில் நாத்திகராக இருந்தீர்களே? என்று கேட்டேன்.
அதற்கு, 'ஒரு காலத்தில் நான் நாத்திகனாக இருந்ததும் இறைவனின் சித்தமல்லாமல் வேறென்ன?" என்று பதில் சொன்னார் அவர். வாழ்வின் இன்ப துன்பங்கள் அனைத்தையும் இறைவன் சித்தம் என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவர் மனம் பெற்றிருந்தது.
அவர் காலமானபோது கடுந்துயர் அடைந்த நான் எழுதிய இரங்கல் கவிதை:
வாவென்று சொல்லியொரு கட்டளை கேட்டதென வானேறிப் போகலாமோ?
வையத்தில் உன்னுடைய ரசிகர்கள் மனமெலாம் வன்தீயில் வேகலாமோ? சாவென்று சொல்லுமொரு கொலைகாரப் பாவிக்கு நீயிரை ஆகலாமோ? சந்தத் தமிழ்க் கவிதை உடன்கட்டை ஏறுமே அதைவிட்டுச் சாகலாமோ?
காவென்று பாடியும் கேட்காத கண்ணனின்
காதுக்கு உணர்வில்லையோ? - உன்
கவியமுதம் வேண்டியே வானமுதம் நீத்திட்ட வானவர் செய்த சதியோ?
பூவென்று தேனென்று பொன்னென்று அமுதமாய்ப் பொழிகின்ற கவிதந்தவா! புல்லாங் குழலிசையை வீணையைக் கவியாக்கிப் பாட்டென்ற கண்ணதாசா!
கண்ணெலாம் மூக்கெலாம் வாயெலாம் உடலெலாம் கவிதையால் செய்த பிறவி! கருத்தெலாம் மனமெலாம் உணர்வெலாம் தித்திக்கும் தமிழினால் செய்த வடிவம்! மண்ணெலாம் வியந்ததே ! விரைவிலுன் பொன்னுடல்
மண்ணுக்குள் போகவென்றோ? வான்வரை உன்புகழ் வளர்ந்ததே! விரைவில் நீ வானகம் சேரவென்றோ?
அண்ணலே! உன்னுடைய அருந்தமிழ்க் கவிதைபோல் யாரினிப் பாடுவாரோ?
அற்புதக் கற்பனைச் சமுத்திரக் களஞ்சியம் யார்க்கினிச் சித்திக்குமோ?
பண்தந்து இசைதந்து பூங்குயில் குரல்தந்து கவியென்று பொய்சொன்னவா!
பலநூறு வருடத்திற் கோர்முறை தோன்றிடும் பாவல, கண்ணதாசா!
What's Your Reaction?

