த.வெ.க.வுக்கு எடப்பாடி செக்?.... அமித் ஷா மூலம் புது ப்ளான்!

த.வெ.க.வின் அதிமுக நிர்வாகிகள் மீதான கவனத்தை தடுக்க, எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aug 23, 2026 - 13:00
த.வெ.க.வுக்கு எடப்பாடி செக்?.... அமித் ஷா மூலம் புது ப்ளான்!

அ. தி.மு.க.வை கொஞ்சம் கொஞ்சமாக தன்வசப்படுத்திவரும் த.வெ.க.விற்கு ஷாக் கொடுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி உதவி கேட்டிருப்பதுதான் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பான அரசியல் டாக்!

இதுபற்றி, திருப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க. மாநில நிர்வாகி ஒருவர் நம்மிடம், "த.வெ.க.வில் ஐக்கியமான அதிமுக மாஜி அமைச்சர்களான கரூர் விஜயபாஸ்கரும் புதுக்கோட்டை விஜயபாஸ்கரும் மாநிலம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை தொடர்புகொண்டு, த.வெ.க.வில் இணைய சில பல ஆஃபர்களுடன் அழைப்பு விடுத்துவருகிறார்கள். அதை புறந்தள்ள முடியாத பல நிர்வாகிகள் ஆளுங்கட்சியில் இணைய தயாராகிவருகிறார்கள். இப்படியாக பனையூருக்கு பயணமாக இருக்கும் லிஸ்ட்டை பார்த்த எடப்பாடி மிகவும் ஆவேசமாகிவிட்டார். இதை இப்படியே விடக்கூடாது என முடிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த நிலையில்தான் திருவண்ணாமலை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை சென்னை ஏர்போர்ட்டில் சந்தித்த இ.பி.எஸ்., எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லி குதிரை பேர அரசியல் செய்துவருகிறார்கள். அவர்கள் ராஜினாமா செய்த அடுத்த 20வது நிமிடத்தில் த.வெ.க.வில் இணைத்துக்கொள்கிறார்கள்.

தங்கள் கட்சிக்கு வந்துவிடுமாறு என்னை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கூப்பிட்டார்கள் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஓபனாகவே சொன்னார்' என்பதை நினைவு கூர்ந்தவர், 'இது தொடர்பான ஆதாரங்களுடன் கவர்னரிடம் அ.தி.மு.க. கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேர மனு மீது உடனடியாக விசாரணை நடத்தவேண்டும்' என்று மன்றாடியிருக்கிறார். அதற்கு அமித் ஷாவும், 'நிச்சயமாக நடக்கும்' என்று உறுதியளித்திருக்கிறார்.

இதற்கிடையே, குதிரை பேர வழக்கில் கைதான கரூர் ரமேஷ், 'இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என்று மனுத் தாக்கல் செய்திருந்தார். சுமார் 15 நாட்களுக்கு முன்பு ரமேஷுக்கு உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், சிறையை விட்டு அவர் வெளியே வந்தபோது போலீஸார் அவரை மீண்டும் கைது செய்து புழல் சிறைக்கே கொண்டுசென்றார்கள். ரமேஷின் வழக்கறிஞர் காரணம் கேட்டபோது, டாஸ்மாக் வழக்கில் ரமேஷ் கைதாகிறார் என போலீஸார் சொல்லியிருக்கிறார்கள்.

டாஸ்மாக் வழக்கில் மூலனூர் கார்த்தி பெயர்தான் இருக்கிறது, ரமேஷ் பெயர் இல்லை. ரமேஷ் வெளியே வந்தால், குதிரை பேர வழக்குக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்பதில் உறுதியாக இருப்பார். அதனாலேயே அவரை மீண்டும் சிறையில் அடைத்துவிட்டார்கள். இப்போது அந்த ரமேஷை வெளியே எடுக்க எடப்பாடி தயாராகிவருகிறார். ரமேஷின் உறவினர்கள் சிலரும் சமீபத்தில் எடப்பாடியை சந்தித்திருக்கிறார்கள். இப்படியாக அதி.மு.க.வை கபளீகரம் செய்யும் த.வெ.க.வின் திட்டத்தை, அமித் ஷா உதவியுடன் எடப்பாடி முறியடிக்க ரெடியாகிவிட்டார்" என்றார்.

இதுபற்றி அதி.மு.க. அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் கலையரசனிடம் கேட்டோம். "எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்னை தொடர்புகொண்டு, ஆளுங்கட்சியில் கூப்பிடுகிறார்கள் வாருங்கள் என்று அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். குதிரை பேரம் நடந்தது உண்மைதான். அதி.மு.க. சார்பில் கவர்னரிடம் கொடுத்த மனு மீது நிச்சயம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
பார்ப்போம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow