விண்ணில் பாய்ந்தது ’விக்ரம் – 1’… விண்வெளித் துறையில் சாதித்த தனியார் நிறுவனம்..!

இந்திய விண்வெளித் துறையில் முக்கிய திருப்புமுனையாக, உள்நாட்டு தனியார் நிறுவனத்தால் முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Jul 18, 2026 - 15:29
விண்ணில் பாய்ந்தது ’விக்ரம் – 1’… விண்வெளித் துறையில் சாதித்த தனியார் நிறுவனம்..!

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ‘மிஷன் ஆகமன்’ திட்டத்தின் கீழ் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்பட்டது. காலை 11.30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஏவுதல், மேகமூட்டமான வானிலை காரணமாக 35 நிமிடங்கள் தாமதமாகி, மதியம் 12.05 மணிக்கு நடைபெற்றது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த ராக்கெட், பூமியில் இருந்து 453 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள தாழ்வான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று நிகழ்வை நேரில் பார்வையிட்ட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். IN-SPACe தலைவர் பவன் கே. கோயங்காவும், தனியார் துறையின் முதல் ஏவுதல் முயற்சி வெற்றிகரமாக நிறைவேறியதாக பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இளைஞர்களின் திறமை, தொழில்முனைவு மற்றும் புதுமை சிந்தனையை இந்தத் திட்டம் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான, அதிகபட்சம் 350 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமார் 450 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தும் வகையில் விக்ரம்-1 வடிவமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டின் பல்வேறு நிலைகள் விண்வெளியில் செயல்படும் விதத்தை மதிப்பீடு செய்து, எதிர்காலப் பயணங்களுக்கான தரவுகளை சேகரிப்பதும் இந்த சோதனையின் முக்கிய நோக்கமாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow