CELLPHONE SIGNAL-லாம் ஒரு ஆதாரமா? குதிரை பேர வழக்கில் ட்விஸ்ட்..! கரூர் Brothers-க்கு முன்ஜாமீன்..!

தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேர வழக்கில் புதிய ட்விஸ்டாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு முன் ஜாமின் வழங்கி அதிரடி காட்டியுள்ளது உயர்நீதிமன்றம். கரூர் பிரதர்ஸை காப்பாற்றிய முக்கிய பாயிண்ட் என்ன? ஜாமின் கிடைத்ததற்கான காரணம் என்ன? விரிவாக பார்ப்போம். 

Jul 8, 2026 - 18:00
CELLPHONE SIGNAL-லாம் ஒரு ஆதாரமா? குதிரை பேர வழக்கில் ட்விஸ்ட்..! கரூர் Brothers-க்கு முன்ஜாமீன்..!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, குதிரை பேரம் பேசியதாக கூறப்படும் தொலைப்பேசி பேச்சுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும், சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அரசை கவிழ்க்க சதி என யூகத்தின் அடிப்படையில் புகார் கூறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் அரசு கவிழாது என்பதோடு, சபாநாயகருக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவளித்தனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. 

அசோக்குமார் தான் தூண்டினார் என குற்றம் சுமத்தியுள்ளனர், ஆனால் திருநாவுக்கரசு ஈரோடில் இருந்த நாளில் அசோக்குமாரும் அங்கு இருந்தார் என்பதை தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இருவரும் சந்தித்தார்களா இல்லையா என்பதை வழக்கில் சொல்லவில்லை என செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அசோக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன், எப்போதெல்லாம் சகோதரர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறதோ, அந்த வழக்குகளில் அசோக்குமாரை சேர்த்து விடுவதாகக் குறிப்பிட்டார். ஏற்கனவே ஒரு செய்தியாளர் இது சம்பந்தமாக பேசியதாக புகாரில் கூறிய நிலையில், அதுகுறித்து எந்த புகாரும்  அளிக்கவில்லை என்றும், சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க கோர முடியாது என்றும் அசோக்குமார் தரப்பு வாதிட்டது.

மேலும், 35 கோடி குதிரை பேரம் யூகம் தான் என்றும், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் வாதிடப்பட்டது. அதுமட்டுமல்ல, திமுக-வுக்கு 59 எம்.எல்.ஏ-க்கள், அதிமுகவுக்கு 47 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். ஆனால் ஆளும் தவெக-வுக்கு காங்கிரஸ், வி.சி.க., இரண்டு கம்யூனிஸ்டுகள் என எல்லாரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக  உள்ளதால், 59 பேர் உள்ள திமுக எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.

செந்தில்பாலாஜி மற்று அசோக் தரப்பு வாதங்களை தொடர்ந்து, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கூறுகையில், குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் இருவர் கரூரைச் சேர்ந்தவர்கள் என்றும், புலன் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜூன் 25, 26, 27ஆம் தேதிகளில் கிண்டி தனியார் ஓட்டலில் சந்தித்து பேசியுள்ளளனர் என்றும் குறிப்பிட்டார். மேலும், திருநாவுக்கரசு, வேறு காரணத்துக்காக புகாரதரரான எம்.எல்.ஏ. இளையராஜாவுடன் பேசியதாகக் கூறிய நிலையில், இந்த குற்றச்சதிக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும், விசாரணைக்கு ஆஜராக செந்தில்பாலாஜிக்கும், அசோக்குமாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால்  இருவருமே ஆஜராகவில்லை என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். 

தொடர்ந்து, இவ்வழக்கில் அசோக்குமார் தொடர்பு உள்ளதற்கு ஆரம்பகட்ட ஆராதங்கள் உள்ளதாகவும், ஹவாலா பணம் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும், புலன் விசாரானை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார் அரசு தரப்பு வழக்கறிஞரான சத்யன்.

இந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தினமும் காலை, மாலை காவல்துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தவெக அரசுக்கு இவ்வழக்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எப்படியாவது இந்த வழக்கின் மூலம் திமுகவின் கரூர் கம்பெனியை காலி செய்துவிட துடிக்கும் ஆளுங்கட்சியின் முயற்சிக்கு திமுக வழக்கறிஞர்கள் ஸ்பீடு பிரேக் போட்டுள்ளதாகவும், ஆனால் இதனை தவெக அரசு சும்மா விடாது, இடைத்தேர்தலுக்கு முன்னரோ அல்லது கரூர் சென்று வந்த பிறகோ இவ்வழக்கை வேறு திசையில் கொண்டுச் செல்ல முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow