கோவை: கோழிக்கே தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் விவசாயிகள்

பணம் கொடுத்து லாரியில நல்ல தண்ணீர் வாங்கி நாங்க குடிக்கிறதோடு, கால்நடைகளுக்கும் கொடுக்குறோம்.

Nov 28, 2023 - 15:26
Nov 29, 2023 - 07:12
கோவை: கோழிக்கே தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் விவசாயிகள்

பாய்ஸனாகிப் போன பாசன நீரால் கோழிக்கே தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு விவசாயி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் ஜனநாயகத்துக்கு இணையான பெருமை பெற்றது விவசாயம்.விரைவாக வளரும் நாடு! என்பதை விடவும், விசாலமான விவசாய நாடு! என்பதில்தான் நமக்கு பெருமையே அதிகம். ஆனால்!....என்ன ஆனால்? எது நமது பலமாக இருக்கிறதோ அதுவே நமது பலவீனமாகவும் மாறி நிற்கும்! என்பது போல, இந்தியாவை சர்வதேச அளவில் பெருமைப்பட வைக்கும் விவசாயத்தில்தான் லட்சபோ லட்சம் சிக்கல்கள்.

விதைப்பில் இருந்து அறுப்பு வரையில் தினம் தினம் எக்கச்சக்க பிரச்னைகளை சந்தித்து, சமாளித்து, அதைத்தாண்டித்தான் களத்தில் மகசூல் காண்கிறான் குடியானவன். பூச்சி முதல் புரோக்கர் வரையில் அத்தனை பேரும் அவனை பிய்த்துப் பிய்த்து தின்னதான் செய்கிறார்கள்! ஆனாலும் களம் காணும் யுத்த நாயகனாக  வரப்பில் ஏறி நிற்கிறான் விவசாயி. 

இந்தியாவில் விவசாயம் செழிக்கும் பூமியில் மிக முக்கியமானது தமிழகம். ஆனால் இந்த மண்ணிலும் எக்கச்சக்க பிரச்னைகள், பஞ்சாயத்துகள் உழவனுக்கு. அதில் குறிப்பாக கோவை மாவட்டம் சூலூர் பகுதி விவசாயிகளுக்கு  உருவாகியிருக்கும் பிரச்னையோ கலங்க வைக்கிறது. குறிப்பாக பதுவம்பாளையம், ராயர்பாளையம், சுண்டல்மேடு, சென்னப்பசெட்டி புதூர் உள்ளிட்ட கிராமங்களில்  பாசன கிணறுகள் பாய்சன் கிணறுகளாக மாறி நிற்கின்றன. ஒரு காலத்தில் நெல், கரும்பு, தென்னை என்று பணப்பயிர் வளர்ந்த இந்த பூமி இப்போது பாழாகிக் கிடக்கிறது. 

காரணம்? குறைந்து போன மழை! அதனால் வெகுவாக வற்றிப் போன நிலத்தடி நீர். எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரும் விஷமாக மாறுவதுதான் கொடுமையே. 
இது பற்றி விளக்கும் அக்கிராம விவசாயிகளான பாலகிருஷ்ணன் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் “விவசாயம் செழிக்கிற இந்த கிராமங்களை சுற்றி காஸ்டிங், வால்வு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மெத்தை தயாரிப்பு தொழிற்சாலைகள் நிறைய வந்துடுச்சுங்க. துவக்கத்துல இந்த ஆலைகள் தங்களோட வேஸ்ட் வாட்டரான கெமிக்கல் கலந்த கழிவு நீரை கால்வாயில விட்டாங்க. அதுவே பல பிரச்னைகளை உருவாக்குச்சு. ஆனால் இப்பவோ அதை வெளியேற்றாமல் அப்படியே தங்களோட வளாகத்துக்குள்ளேயே போர் போட்டு உள்ளேயே இறக்கிடுறாங்க. 

இதனால கண்ணுக்கே தெரியாமல் நிலத்தடி நீர் கொஞ்சம் கொஞ்சமா மாசு அடைஞ்சு இன்னைக்கு மக்கள் மட்டுமில்ல ஆடு, மாடு, கோழிகள் கூட குடிக்க முடியாத அளவுக்கு விஷமாக மாறிடுச்சுங்க. விவசாயத்துக்கு இந்த தன்ணிய சுத்தமாவே பயன்படுத்த முடியலை. பயிர் நாசமாகுது. அதுமட்டுமில்லாமல்  கால்நடைகளுக்கு கொடுத்தா அதுங்களுக்கு கால் வீக்கம் வருது. கோழிகளோட தொண்டையில் புண், வீக்கம் உருவாகுது.அதனால பணம் கொடுத்து லாரியில நல்ல தண்ணீர் வாங்கி நாங்க குடிக்கிறதோடு, கால்நடைகளுக்கும் கொடுக்குறோம். விவசாயிக்கு கட்டுப்படி ஆகுற விஷயமா இது?” என்கிறார்கள். கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக களமிறங்கணும்!

-ஷக்தி 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow