ஜார்க்கண்ட் மாணவர்கள் மீது வன்முறை: காவல்துறை நடவடிக்கைக்கு ராகுல் காந்தி கண்டனம் !

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை வன்முறை பயன்படுத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Aug 10, 2026 - 21:34
ஜார்க்கண்ட் மாணவர்கள் மீது வன்முறை: காவல்துறை நடவடிக்கைக்கு ராகுல் காந்தி கண்டனம் !

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பயன்படுத்தியது தவறு என காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடி செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதைக் கண்டித்து கடந்த ஜூலை 25-ம் தேதி முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி மாணவர்கள் பேரணி சென்றபோது, அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை மாணவர்கள் தகர்க்க முயன்றதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தியது தவறு. அமைதியான முறையில் போராடுவது மாணவர்களின் உரிமை. பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகளை காண முடியும். மாணவர்களின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்கு ஜார்க்கண்ட் அரசு தீர்வு காண வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow