உதயநிதி கைதில் உருவாகிறதா புது கூட்டணி ? விஜய்க்கு எதிராக திரளும் கட்சிகள் !
தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கைது செய்யப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்க்கட்சிகயினர் ஆதரவு தெரிவித்தும் அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு விதமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, தி.மு.க. கூட்டணியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் சூழலில், தி.மு.க.வை எதிர்த்துவந்த கட்சிகளோ, தற்போது, உதயநிதி கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் 'விஜய் எதிர்ப்பு' எனும் ஒற்றைப் புள்ளி என்பது தான் லேட்டஸ்ட் அரசியல் அதகள அப்டேட்!
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தஞ்சையில் விவசாயிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாடுகளைக் கண்டிப்பதுதான் இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். அதில் பேசிய உதயநிதி, ஓர் இடத்தில் தடம் மாறி, இரட்டை அர்த்தத்தில் விமர்சனம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்த மறுநாள் காலை, உதயநிதியை சென்னை, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். தஞ்சை வரை உதயநிதியை வேனில் அழைத்துச் சென்றும் விசாரித்தனர். இதற்கு நடுவே உதயநிதியை கைது செய்ய தடைக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றும், 'உதயநிதியிடம் விசாரணை நடத்திவிட்டு, உடனடியாக காவல் நிலைய ஜாமினில் விடுவிக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, அன்று மாலையே உதயநிதி விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, மாநிலம் முழுவதும் தி.மு.கவினர், த.வெ.க. அரசைக் கண்டித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இச்சம்பவத்தில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இதுதான்...தேர்தலுக்கு முன்பு திமுகவுடன் கூடிக் குலாவிய காங்கிரஸ், மதிமுக, வி.சி.க. மற்றும் இடதுசாரிகள் உதயநிதி கைது விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்தன. ஆனால், திமுகவே எதிர்பாராத வகையில் அக்கட்சியை எதிர்த்துவந்த சில கட்சிகள் ஆதரவுக் குரல்கள் எழுப்பியிருப்பதுதான் திடீர் பொலிடிக்கல் ட்விஸ்ட்!
'காவிரி விவகாரத்தில் காட்டாத வேகம் உதயநிதி கைதுக்கு காட்டப்படுவது ஏன்?' என்று காட்டமாக கொந்தளித்திருக்கிறார் சீமான். 'எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நசுக்கும் செயல்' என்று சீறியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். கிருஷ்ணசாமியோ 'தவறான முன்னுதாரணம்' என்று சொல்லியிருக்கிறார். அன்புமணியும், 'உதயநிதியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்?' என்று கேட்டிருக்கிறார்.
இப்படி இவர்கள் எல்லாம் ஒருசேர திரள்வதற்கு 'விஜய் எதிர்ப்பு' என்ற ஒற்றைப்புள்ளிதான் காரணம். தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க.வும் பா.ம.கவும் அதிருப்தியான மனநிலையில்தான் பயணிக்கின்றன. த.வெ.க தலைவர் விஜய்யின் மாஸை அடித்து நொறுக்க அதிமுகவிடம் போதிய தெம்பும் நெட்வொர்க்கும் தற்போது இல்லை என பா.ம.க.வும் அ.ம.மு.க.வும் நினைக்கின்றன. அதேபோல் 85 சதவிகிதத்தில் இருந்த நாம் தமிழர் வாக்கு வங்கி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 3.5 சதவிகிதத்தில் வந்து நிற்கிறது. அவரது இயக்கத்தை தூக்கி நிறுத்த தி.மு.கவுடன் கூட்டணி என்பதை சீமான் தரப்பு யோசிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு அச்சாரமாகத்தான் சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தபோது, தி.மு.க மாஜி அமைச்சர் அனிதா சார்பில் தாய்மாமன் சீர் வழங்கியதாக சொல்லப்படுகிறது.
ராமதாஸ்- அன்புமணி மோதலுக்குப் பிறகு உடைந்துபோய், தற்போது மெல்ல எழுந்துக்கொண்டிருக்கும் பா.ம.க.வுக்கும் தி.மு.க.வின் தேவை இருக்கிறது. சினிமா நடிகர்களின் அரசியலை ஒரு காலத்தில் ரவுண்டு கட்டி எதிர்த்த பா.ம.கவுக்கு நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க ஒத்துவராது என்பதை உணர்ந்து வைத்திருக்கிறது பா.ம.க மேலும், கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க சம்மதம் தெரிவிக்கும் என்று நம்பும் அன்புமணி தரப்பு, தன் மனைவி சௌமியாவை எதிர்காலத்தில் அமைச்சராக்க முடியும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறது.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் தி.மு.க பக்கம் கண் ஜாடையை திருப்பியிருக்கிறார். துவக்கத்திலிருந்தே அவர் எடப்பாடியுடன் கூட்டணி அரசியல் செய்வதற்கு ஒத்துப்போகவில்லை. மேலும், பா.ஜ.க. கூட்டணியில் நீடித்துவந்த புதிய தமிழகம் கட்சியை, ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கூட்டணிக்குள் வந்த எடப்பாடி, சாதுர்யமாக அங்கிருந்து நகர்த்திவிட்டார். இதனால், அவரும் தற்போது தி.மு.க.வுடன் கரம் கோக்க தயாராக இருக்கிறார். அ.ம.மு.க.வை டி.டி.வி.தினகரன் துவங்குவதற்கு காரணமே எடப்பாடி தான். ஆனாலும், பா.ஜ.க. கொடுத்த அழுத்தத்தால் அ.தி.மு.க. கூட்டணியில் அவர் ஐக்கியமானார். எதிர்காலத்தில் தன்னை நோக்கி அ.தி.மு.க வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் தினகரன். ஆனால், அதற்கான சாத்தியங்கள் குறைந்துகொண்டே வருவதால் அவரும் தி.மு.க.வை நோக்கி நகரும் எண்ணத்தில்தான் இருக்கிறார்.
த.வெ.க.வை எதிர்த்து தனித்து நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் உதயநிதிக்கு இவர்களின் ஆதரவு கிடைக்கும்போது பெரும் பலம் கிடைக்கும் என நினைக்கிறது தி.மு.க. தலைமை அன்புமணி, டி.டி.வி.தினகரன், சீமான், கிருஷ்ணசாமி ஆகியோர் உதயநிதியுடன் இணைந்து ஒரே மேடையில் பேசும்போது அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கணக்கு போடுகிறது தி.மு.க. தலைமை" என சொல்லி முடித்தார்.
இதுகுறித்து, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டதற்கு "உதயநிதி கைது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே அவர்கள் கண்டித்திருக்கிறார்கள். கூட்டணிக்கான அவசியம் தற்போது எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும் கட்சித் தலைவர்தான் முடிவு செய்து அறிவிப்பார்" என்றார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்!
குமுதம் செய்திகளுக்காக கு.கணேஷ்குமார்.
What's Your Reaction?



