கரூரில் விஜயின் பேச்சு : சூடுபிடித்த இடைத்தேர்தல் அரசியல்....
கரூரில் விஜய் இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கி எதிர்க்கட்சிகளை எச்சரித்தார். இதையடுத்து கோயில் நில பட்டா விவகாரம் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"எவ்வளவு பெரிய உயரத்துக்கு சென்றாலும் வலிகளையும் காயங்களையும் மறக்க முடியாது. கரூர் சம்பவம் என் இதயத்தில் வலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த விஜய்யின் விஸ்வரூபத்தை இனிதான் பார்க்கப்போகிறீர்கள்...” என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்த கையோடு, அதே மேடையிலேயே இடைத்தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியிருப்பது எதிர்க்கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது!
கடந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதி பிரசாரத்திற்காக விஜய் கரூர் வந்தபோது நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து வருகிறது. 2026 தேர்தலில் தி.மு.க.வினர் கரூர் சம்பவத்தை முன்னிறுத்தியே பிரசாரமும் செய்தனர். ஆனாலும் த.வெ.கவே ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கரூரில் இறந்த 41 குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சியோடு, கரூரில் இருந்தே இடைத்தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க முடிவு செய்த விஜய், கடந்த ஜூலை 10ம் தேதி கரூர் வந்தார். 41 குடும்பங்களில் தகுதி வாய்ந்த 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர், முன்னதாக அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசினார். சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு உடையில் வந்திருந்த முதல்வர், எடுத்த எடுப்பிலேயே போலீஸ் மீது குற்றம்சாட்டினார்.
"நாமக்கல்லில் பேசிவிட்டு கரூருக்கு வரும்போது, 'கூட்டம் அதிகமாக இருக்கிறது வரவேண்டாம்' என போலீஸார் சொல்லியிருந்தால் இந்த வலியும் வேதனையும் ஏற்பட்டிருக்காது. போலீஸாரே, கரூருக்கு என் கையைப் பிடித்து அழைத்து வந்து நாடகமாடிவிட்டனர். இதையெல்லாம் திரை மறைவில் இருந்து இயக்கியது யார் என தெரியும். வலியிலும் வேதனையிலும் நான் தனிமையில் இருந்தபோது, ஓடி ஒளிந்துவிட்டேன் என பழி போட்டார்கள். அப்படிபட்டவர்களுக்கு தேர்தலில் தகுந்த பதிலடி கொடுத்தீர்கள். இவர்கள் இதற்குப் பிறகும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். கரூர் சம்பவம்போல இனி எங்கும் நடந்துவிடக் கூடாது. அதை நினைவுகூறும் வகையில் கரூரில் நினைவுச் சின்னம் வைக்கப்படும்.
கரூர் கம்பெனி ஓனர் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை. இன்னொருவர் சிங்கப்பூரில் இருக்கிறார். ஊழல் செய்தவர்களை வேட்டையாடி வருகிறோம். வரும் இடைத்தேர்தலில் தீயசக்தியை படுதோல்வியடைய செய்ய வேண்டும்" என அதிரடியாக பேசிய முதல்வரிடம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேடையிலேயே, "கோயில் மானிய நிலங்களில் ஏழை, எளிய மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து வீடுகள் கட்டியிருக்கிறார்கள். அந்த நிலங்களை அறநிலையத்துறை சீல் வைத்து அவர்களை ரோட்டில் நிற்க வைத்திருக்கிறது. இதை முதல்வர் தடுக்க வேண்டும்." என்றார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் வினய் திருப்பூர் அறநிலையத் துணை இணை ஆணையருக்கு அனுப்பியுள்ள மெயிலில், 'கரூரில், கோயில் பெயரில் உள்ள நிலங்களை பத்திரப் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நபர்களின் நிலங்கள் மீதான தடையை நீக்கம் செய்ய கரூர் கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார். 3,034 ஏக்கர் நிலத்துக்கு, 3,390 நபர்களின் பெயரில் பட்டா உள்ளது. அவற்றின் மீதுள்ள தடைகள் நீக்கப்பட்டுள்ளன' என அறிவித்துள்ளார்.
கரூர் மக்கள் சந்திப்பு நடந்த சில நிமிடங்களில், செந்தில்பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில், 'செப்டம்பர் 27ம் தேதி, அந்த துயரச் சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்ட என் கரூர் மக்களுக்காக களத்தில் நின்று காப்பாற்றியது யார்? கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுந்தபோது, தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு பேச்சை தொடர்ந்தது யார்?
இறந்தவர்களை பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்? ஓடு... ஓடு... ஓடு..." என பதிவிட்டிருக்கிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனோ, 'தமிழகத்தில் மிகப்பெரிய - மோசடியை தவெ.க. அரசு அரங்கேற்றியுள்ளது. 25,000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை ஒரே நாளில் கலெக்டர் பரிந்துரை செய்து பட்டா போட்டிருக்கிறார்கள். முதல்வர் ஜோசப் விஜய் இந்து கோயில்களின் சொத்துகளை அழிக்க - வேண்டும் என்பதற்காக இதை செய்திருக்கிறார். நெரிசலில் சிக்கி இறந்தவர் குடும்பங்களுக்கு = வேலை கொடுப்பதும், 25,000 கோடி மதிப்புள்ள - சொத்துகளை பட்டா போட்டுக் கொடுப்பதும் சுயநலம். இதற்காக பெரிய போராட்டத்தை பா.ஜ.க. நடத்தப்போகிறது' என்றார்.
What's Your Reaction?



