மாறி மாறி தாக்குதல்: ஈரான் பி1 பாலம் மீது ஏவுகணை தாக்குதல், இஸ்ரேல் ரயில் நிலையத்தை தகர்ப்பு
ஈரான் பி1 பாலம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் ரயில் நிலையத்தை ஈரான் தகர்த்துள்ளது.
கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியையும் முடக்கி வைத்துள்ளது. அதனை திறக்க அமெரிக்க அதிபர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், ஈரான் சற்றும் அசராமல், தொடர்ந்து அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார். ஆனால், அதற்கு பயப்படாத ஈரான், ட்ரம்ப்பிற்கு பதில் மிரட்டல்களை விடுத்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் மிக உயரமானப் பாலமாகவும் ஈரானின் பொறியியல் அடையாளச் சின்னமாகவும் விளங்கும் கராஜை தலைநகர் தெஹ்ரானுடன் இணைக்கும் பி1 பாலத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காணொலியை வெளியிட்டு டிரம்ப் தெரிவித்ததாவது, "ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுகிறது, இனி அது ஒருபோதும் பயன்பாட்டுக்கு வராது. இதுபோன்ற பல நிகழ்வுகள் தொடரவுள்ளன. ஒருவேளை எதிர்காலத்தில் மாபெரும் நாடாக உருவெடுக்கக்கூடிய ஈரானில் எஞ்சியிருக்கும் அனைத்தும் அழிந்துபோவதற்கு முன்பாக, தாமதப்படுத்தாமல் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்வதற்கான நேரம் இது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இருதரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. தங்களது பாலம் நொறுக்கப்பட்டதால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
இன்று அதிகாலை, டெல் அவிவ் நகரை குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள், 9 இடங்களை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஒரு ரயில் நிலையம் மற்றும் கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக, இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவிர, அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள ஜோர்டான், ஈராக், வளைகுடா நாடுகள் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

