குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ், மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: அடுக்கடுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி 

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முழுமையான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டு உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏழை எளிய மக்கள் மற்றும் மகளிரைக் கவரும் வகையிலான பல்வேறு அதிரடி வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ், மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: அடுக்கடுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி 
அடுக்கடுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி 

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலத் திட்டங்களைத் தொடரப் போவதாகக் குறிப்பிட்ட அவர், குடும்ப அட்டைதாரர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். குறிப்பாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி (Fridge) வழங்கப்படும் என்று அறிவித்தார்.

பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மாதம் ரூ. 2,000 ஊக்கத்தொகை மற்றும் 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் திருநங்கைகளைப் போலவே இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற முக்கிய அறிவிப்பும் இதில் இடம்பெற்றுள்ளது. முதியோர் உதவித்தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் என்றும், வீடற்றவர்களுக்கு 'அம்மா இல்லம்' திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி வங்கிகளில் பெறப்பட்ட கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை மற்றும் 1% இடஒதுக்கீடு வழங்கப்படும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நாட்கள் 100-லிருந்து 150-ஆக உயர்த்தப்படும் என்றும், 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வலியுறுத்தப்படும் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை போன்ற கோரிக்கைகளும் அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான காப்பீடு, தெருவிலங்குகள் நலன் மற்றும் நெசவாளர்களுக்கான திட்டங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow