வேட்பாளருக்கு புது நெருக்கடி: 8 நாள் இருந்தாலும் வேட்புமனுத் தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டும் தான்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 4 நாட்கள் மட்டும் வேட்புமனுதாக்கல் செய்ய முடியும் என்பதால் வேட்பாளர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மார்ச் 30-ம் தேதி தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் அறிவிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் நிலையில், இடையில் வரும் தொடர் விடுமுறை நாட்களால் வேட்பாளர்களுக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
மார்ச் 31 (தெலுங்கு வருடப்பிறப்பு), ஏப்ரல் 3 (புனித வெள்ளி), ஏப்ரல் 4 (சனிக்கிழமை) மற்றும் ஏப்ரல் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு நாட்களும் பொது விடுமுறை என்பதால் அன்று மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மொத்தமுள்ள எட்டு நாட்களில் வெறும் நான்கு நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய முடியும். ஏப்ரல் 6-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுருக்கமான கால அவகாசத்தை கருத்தில் கொண்டு, வேட்பாளர்கள் தங்களது ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து, நெரிசலை தவிர்க்கத் திட்டமிடுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?

