அரசு உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை : புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு 

அரசு உயர் அதிகாரிகள் 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அரசு உயர் அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை : புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு 
அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில் அரசு சார்பு செயலாளர் முருகேசன் அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை பின்பற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்தை தொடர்ந்து புதுவை மாநில தலைமை செயலாளர் சரத் சவுகான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் அரசின் சொத்துக்களை சரியாக பயன்படுத்த வேண்டும். எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை உடனடியாக பின்பற்ற வேண்டும்.அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்கள், கல்விச்சுற்று பயணங்கள் மற்றும் ஆலோசனை பயணங்களை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அரசின் அதிகாரப்பூர்வ வாகனங்களின் பயன்பாடு சிக்கனமாக ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.

எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக வாகனப் பகிர்வு நடைமுறை பின்பற்ற வேண்டும் மற்றும் தேவையற்ற வாகனப் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும். எரிபொருட்கள் வாங்குவதை குறைக்க தேவையற்ற அரசு வாகன பயன்பாட்டை குறைக்க வேண்டும்.முடிந்த வரை துறைகளுக்கு இடையேயான கூட்டங்கள், ஆய்வுக்கூட்டங்கள், ஒருங்கிணைப்பு கூட்டங்கள் அனைத்தையும் காணொளி கட்சி வழியாக நடத்த வேண்டும். இதன் மூலம் வெளியிடங்களில் இருந்து வந்து கூட்டங்களில் பங்கேற்கும் பயணத் தேவைகளை குறைக்க வேண்டும்.

அனைத்து அரசு அதிகாரிகளும் மற்றும் பணியாளர்களும் தங்களது வழக்கமான அலுவலக பயணங்களுக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்சார சேமிப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் விளக்குகள், குளிர்சாதன வசதிகள், கணினிகள் மற்றும் பிற மின்சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும். அதிகாரிகளும், பணியாளர்களும் மதிய உணவு நேரத்தில் தங்களது வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, அலுவலகத்திற்கு உணவை எடுத்து வந்து சாப்பிடுவது நல்லது.

அறிவுறுத்தல்களை வளர்ச்சி ஆணையர், அனைத்து ஆணையர்கள், அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் அலுவலகத் தலைவர்கள் கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow