மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு 

சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதன் பின்னர் தனது எக்ஸ் பதிவில் மெட்ரோ 2-ம் கட்ட பணிகள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்குவோம் என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு 
ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின்

இன்று காலை சென்னை சென்ட்ரல் - தேனாம்பேட்டை இடையே மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அப்போது, அரசின் நலத்திடங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினுடன் பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதனிடயே, சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன். மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்... என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு எக்ஸ் பதிவில், மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம். துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர். அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.

விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!. சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! என பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow