மேலாளருக்காக அரசு நிகழ்ச்சியவே ரத்து செய்தாரா முதல்வர் விஜய்? ஷாக்கான நெட்டிசன்ஸ்..!
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலாளரின் இல்ல நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி சட்டையுடன் ஆஜராகியுள்ளார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, பெண்களின் பாதுகாப்பிற்காகச் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ தொடங்கப்படும் என்ற கோப்பில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டிருந்தார். இத்திட்டம் மே 29 ஆம் தேதி முறைப்படி தொடங்கப்பட இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இறுதி கட்டத்தில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் தான் தவெக அரசின் அதிகாரப்பூர்வ திட்டங்களின் முதல் படி. அப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியை எதற்காக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துக் கொண்டிருக்கின்றன.
இத்தகையச் சூழலில், எப்போதுமே கோட் சூட்டுடன் காட்சி தந்து வந்த முதலமைச்சர், முதல்முறையாக பட்டு வேட்டி சட்டையுடன் தலைமைச் செயலகத்திற்கு வருகைத் தந்தார். என்ன திடீரென் பட்டு வேட்டி பட்டு சட்டை என்று விசாரித்த போது தான், முதலமைச்சர் விஜய் தனது மேலாளர் ஜெகதீஸ் இல்லச் சிறப்பு நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளார் என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது மேலாளர் ஜெகதீஷ் புதுமணை புகுவிழாவிற்கு முதலமைச்சர் விஜய் சென்று, இந்த விழாவிற்காக பட்டு வேஷ்டி சட்டையில் ஆஜரான முதலமைச்சர் விஜய் அப்படியே நேராக தலைமைச் செயலகம் வருகை தந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
ஜெகதீஷை பொறுத்தவரை, சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக ’விஜய்’யின் பிராண்ட் மதிப்பை உச்சத்தை தொடவைத்தது தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் சாம்ராஜ்ஜியம் வரை ஜெகதீஷ் மற்றும் அவரது ‘தி ரூட்’ நிறுவனம் ஆற்றிய பங்கு என்பது இன்றியமையாதது. அதுவே தற்போது விஜயை முதலமைச்சர் அரியணையில் ஏற்றுவதற்கு காரணமாக இருந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகைக்கான அஸ்திவாரம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதல்ல என்றும், அது பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டதோடு, இதனை நடைமுறைப்படுத்த ஜெகதீஷூம், தி ரூட்டும் பல காலமாக இறங்கி வேலைப்பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்குப் பின்னால் ஜெகதீஷின் ரூட் நிறுவனம் வெறும் சினிமா மேலாண்மை நிறுவனமாக மட்டுமின்றி, ஒரு மிகப் பெரிய தரவு பகுப்பாய்வு மையமாகவும் செயல்பட்டது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதில் குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களைக் கவர ஒரு தனித்துவமான அல்காரித வியூகத்தை ஜெகதீஷ் வகுத்ததாகவும், அதற்கான கைமேல் பலனாகத்தான் ஆட்சி அமைக்க இளைஞர் படையே காரணியாக அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.
இப்படி விஜய்யின் வளர்ச்சிக்கு ஜெகதிஷூம், தி ரூட்டும் முக்கியமான பங்காற்றியதை விவரம் அறிந்த யாரும் மறுக்க முடியாது.
இந்த நிலையில், ஆட்சி அமைக்கவே காரணமாக இருந்த ஜெகதீஷின் இல்ல நிகழ்ச்சிக்காகத் தான், அரசு நிகழ்ச்சியையே முதலமைச்சர் விஜய் ரத்து செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டுகின்றனர் எதிர்க்கட்சிகள்.
மேலும், இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வரும் சூழலில், மேலாளரின் வீட்டு நிகழ்ச்சிக்காக மிக முக்கியமான அரசு திட்டத்தின் தொடக்க விழாவை ரத்து செய்வதா? அரசு திட்டங்கள் என்ன உங்க வசதிக்காக உருவாக்கப்படுகிறதா அல்லது மக்களுக்காக உருவாக்கப்படுகிறதா? அதை எப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நீங்கள் ரத்து செய்வீர்கள்? என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் விளாசி வருகின்றனர்.
What's Your Reaction?