‘ஆபரேஷன் எல்’ தீவிரம்... ஆகஸ்ட் 15-க்குள் 10 அதிமுக எம்எல்ஏக்களை இழுக்க தவெக திட்டமா?
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அதிமுகவின் 10 எம்எல்ஏக்களை தம் பக்கம் இழுக்க வேண்டும் என்பது தான் தவெகவின் டார்கெட் என்று சொல்லப்படுகிறது. இதற்கு தவெக கையில் எடுத்திருப்பது தான் "Operation L" (Operation Legislators) திட்டம்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத திமுக அதிமுக ஆகிய கட்சிகளை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்தது. அரசியல் களத்தில் திமுக அதிமுக மட்டும் ஆட்சியை பிடித்தபோது அதற்கெல்லாம் செக் வைப்பது போல் தவெக ஆட்சி பிடித்துள்ளது.
தேமுதிக எனும் புதிய கட்சியை தொடங்கிய விஜயகாந்தால் கூட தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியவில்லை.ஆனால் விஜய் இந்த சாதனையை செய்துள்ளார். ஆனாலும் அவரது நாற்காலிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் காங்கிரஸ்,விசிக,ஐயூஎம்எல்,கம்யூனிஸ்ட்கள் ஆகியோர் ஆதரவோடு தான் தவெக ஆட்சி நடக்கிறது.
இதற்கிடையில் விஜய் அவ்வப்போது ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி தோல்வி குறித்து கடுமையாக விமர்சித்து வருவது சரியல்ல என்று கூட்டணி கட்சிகள் தெரிவித்தாலும் அதனை எதிர்த்து விஜய் அதே போல் பேசி வருவது கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
"உங்கப்பாவை காணோம், கொத்து பரோட்டா" என்ற சொற்களை பயன்படுத்தி திமுகவை கடுமையாக விமர்சித்து வருவது அனைவரும் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் போல் பேசாமல் இன்னும் சினிமாவில் டயலாக் பேசுவது போல் வசனங்களை எல்லாம் அள்ளிவிட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றும் விமர்சிக்கின்றனர். இதற்கிடையில் கூட்டணி கட்சிகளின் ஆட்சி என்பது எப்போது வேண்டுமானாலும் கவிழக்கூடியது.
இதற்காக தான் அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களை இழுத்துக்கொண்டு அவர்களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டால் தவெக எம்எல்ஏக்கள் ஆகிவிடுவார்கள் என்று தவெக திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கின்றது. அப்போது தான் தவெக பெரும்பான்மை பலத்துடன் சட்டசபையில் எந்த வித பயமும் இல்லாமல் இயங்கத் தொடங்கும். இதற்காக அதிமுகவில் எம்எல்ஏக்களுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆபரேஷன் எல் என பெயரிடப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை இழுப்பதுதான் operation legislators என்பதாகும்.
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் அதிமுகவின் பலம் 41 ஆக குறைந்துள்ளது. விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து 7 தொகுதிகள் காலியாக உள்ளதால் சட்டசபையின் பலம் 227ஆக குறைந்துவிட்டது. இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்குள் அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க தவெக திட்டம் தீட்டிகிறது என்று சொல்லப்படுகிறது.
கடந்த மே மாதம் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களில் 6 பேரை தன் பக்கம் தவெக இழுத்துக் கொண்டது. மீதமுள்ள 19 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிகிறது. கொங்கு மண்டலத்திலும் வடக்கு மாவட்டத்திலும் கொடி கட்டி பறக்கும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரையும் இழுக்கும் நடவடிக்கைகளில் தவெக ஈடுப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் அதிமுகவிலேயே நீடித்தால் நமது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி ஒவ்வொரு எம்எல்ஏக்கள் மனதிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் 10 அதிமுக எம்எல்ஏக்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தவெகவில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இவர்கள் ராஜினாமா செய்வதற்கும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிப்பதற்கும் சரியாக இருக்கும் என்று தவெக கணக்கு போட்டு செயல்பட்டு கொண்டு இருக்கின்றது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு அதே தொகுதியில் தவெக சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாம். அவ்வாறு பெரும்பாலான எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தால் அவர்களில் வேலுமணி, சண்முகம், விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவும் தவெக திட்டமிட்டுள்ளதாம். இதனால் பொழுது விடிந்தால் யார் விலகுவார்களோ என்ற அச்சத்திலேயே எடப்பாடி பழனிசாமி இருக்கின்றார்.
தவெக தங்களிடம் உள்ள பணபலத்தையும் அதிகாரத்தையும் காட்டி எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் தம்முள் இழுத்துக் கொள்கிறது என்று திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இதற்கிடையில் குட்கா வழக்கில் தொடர்புடைய விஜயபாஸ்கர், மற்றொரு ஊழல் வழக்கில் தொடர்புடைய எம்.ஆர்.விஜயபாஸ்கரை வைத்துக் கொண்டு தவெக ஊழலுக்கு எதிரான கட்சி என்று விஜய் பேசாலாமா என்றும் அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதே போல் தவெகவுக்கு இவர்கள் வந்ததால் ஊழல் கறைகளை போக்கும் வாஷின் மெஷினாக தவெக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுகின்றது. ஆனால் விமர்சனங்களை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் ஆகஸ்டு 15 ஆம் தேதிக்குள் 10 அதிமுக எல்எல்ஏக்களை இழுக்க வேண்டும் என்று தவெகவின் தற்போது டார்கெட் என்று கூறப்படுகிறது.
What's Your Reaction?

