நெல்லுக்கு ஊக்கத்தொகை: நிர்மலா சீதாராமன் குட்டு அம்பாலமாகிவிட்டது: முதல்வர் ஸ்டாலின் பதிவு
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது அப்பட்டமான பொய் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழக அரசு வழங்கும் ஊக்கத் தொகையால், நெல் உற்பத்தி நிறைய பெருகி வருகிறதாம். அப்படி பெருகும் காரணத்தால் பல்வேறு பிரச்னைகள் உருவாகிறதாம். அதனால், தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஊக்கத் தொகையை மறு பரிசீலனை செய்ய வேண்டுமாம். என்ன கொடுமை பாருங்கள்.
மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தை வழங்கக் கூடாது என அறிவுறுத்தி மத்திய அரசு நமக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள் என குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார். இந்த குற்றச்சாட்டு பதில் அளித்து இருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் , நெல்லுக்கான ஊக்கத்தொகை நிறுத்த உத்தரவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும் புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது என விளக்கம் அளித்து இருந்தார். அதுமட்டுமின்றி, அவர் எழுதிய கடிதத்தையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த கடிதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது; நிதியமைச்சர், தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்துகொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது.
மேலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகளும், நெல்லுக்கு ஊக்கத்தொகை தரவேண்டாம் எனும் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தாங்கள் தெரிவித்திருப்பதும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த பிப்ரவரி மாதம், கேரளா முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து வெளியிட்ட பதிவே இதற்குச் சாட்சி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
What's Your Reaction?

