முடிவுக்கு வந்த மோதல்? அடிபணிந்த மாஜிக்கள் குழு.. ஆளுமையை நிரூபித்த இபிஎஸ்..!

இபிஎஸ் – சிவிஎஸ் அணி என இரண்டாகப் பிளவுப்பட்டு கிடந்த அதிமுக மீண்டும் ஒன்றிணைய தயாராகிவிட்டதாகவும், என்னத்தான் மாஜிக்கள் அடிபணிந்தாலும் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று எடப்பாடி கூறுவதாகவும் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முடிவுக்கு வந்த மோதல்? அடிபணிந்த மாஜிக்கள் குழு.. ஆளுமையை நிரூபித்த இபிஎஸ்..!

அதிமுகவையும் பிளவையும் யாராலும் பிரிக்க முடியாது என்பது போல, எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு அதிமுக பிளவுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா என்னத்தான் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும், அவரது மறைவுக்கு பிறகு அதிமுக என்பது சல்லி சல்லியாக நொறுக்கப்பட்ட ஒரு கண்ணாடி மாதிரி அரசியல் களத்தில் இருந்துக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இரண்டாக பிளவுப்பட்டு எடப்பாடி அணி, சி.வி.சண்முகம் அணி என அதிமுக இருக்கிறது. தேர்தலில் அதிமுக எம்எல்ஏக்கள் 47 பேர் வெற்றி பெற்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு பழனிசாமி தலைமையில் 22 பேர், சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் என 2 அணியாக பிரிந்தனர்.

தனித் தனிக் குழுக்களாக சபாநாயகரை சந்திப்பது, தவெக அரசுக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் அண்ட் கோ இருப்பதும், எதிராக எடப்பாடி அண்ட் கோ இருப்பதும் என ரத்தத்தின் ரத்தங்களே கட்சியைவிட்டு விலகும் அளவிற்கு எம்.ஜி.ஆர் மாளிகை ஒரு மாயாண்டி குடும்பத்தார் போன்று இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரி என்னத்தான், தங்களுக்குள்ளே அடித்துக் கொண்டிருந்தாலும், அதிமுக பாசம் விட்டு போகாது என்று எண்ணியவர்கள் மத்தியில், எடப்பாடியாருக்கு மட்டுமல்ல சி.வி.சண்முகத்துக்கும் ஷாக் கொடுக்கும் அளவிற்கு தங்கள் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் அதிமுகவின் மூன்று எம்.எல்.ஏக்கள்.

சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று(மே 25) சபாநாயகரிடம் சமர்பித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த மூன்று பேரும் தவெகவில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்த கையோடு, தவெகவில் இணைந்துவிட்டார்.

இந்த நிலையில், சிவி சண்முகம் தரப்பின் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள் மீண்டும் எடப்பாடி தலைமையே வேண்டும் என்று எடப்பாடியார் இல்லத்தில் ஐக்கியமாகி வருகின்றனர்.

தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பாலகிருஷ்ணா ரெட்டி என சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால், சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக சரிந்துள்ளது.

இந்த எம்.எல்.ஏக்களின் மன்னிப்பை ஏற்று மீண்டும் தனி அணியில் எடப்பாடியார் இணைக்கும் பட்சத்தில், கட்சியை இரண்டாக பிரித்த சிவி சண்முகத்தையும், எஸ்.பி.வேலுமணியை மீண்டும் கட்சியில் சேர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில், இவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற அனைவரையும் எடப்பாடியார் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து மீண்டும் கட்சியை பிளவுப்படுத்த வாய்ப்புகள் இருப்பதால் இவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்குவதற்கு தயாராக உள்ளதாகவும் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow