பாஜக அரசுக்கு எதிராக பதிவு... ஷாக் கொடுத்த அண்ணாமலை.. தவெகவில் ஐக்கியமா?
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளது கமலாலய வட்டாரத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகுகிறாரா என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என்று கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே பிரச்னை நிலவி வந்தது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதி தரப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், இருமொழிக் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது என கடந்த திமுக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்த சூழலில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறியதும், மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று புதிய அரசுக்கு அறிவுறுத்தியது. அதன் முதற்கட்ட, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது.
இந்த நிலையில், இந்த அறிவிப்பை எதிராக பாஜகவில் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. அது வேறு யாரும் அல்ல, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் இருந்துதான்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மும்மொழிக் கொள்கையை, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது. CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அண்ணாமலை தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலையின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி தலைமையை சூடாக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவராக நீடித்தால் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அதிமுக கூறிய நிலையில், அண்ணாமலையை மாற்றி நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைமையாக்கியது டெல்லி மேலிடம். மாநில தலைமைக்கு பதிலாக எல்.முருகன் போன்று மத்திய அமைச்சரவையில் ஏதேனும் இடம் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த அண்ணாமலையை தேசிய பொதுக்குழு உறுப்பினராகத்தான பாஜக நியமித்தது.
தமிழ்நாட்டில் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தவர் அண்ணாமலை. அவரை மாநிலப் பொறுப்பில் இருந்து நீக்கியது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இதுவரை அண்ணாமலைக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லையே என்ற அதிருப்தி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவது வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் அவருக்கு வழங்காமல் டெல்லி மேலிடம் ஏமாற்றியதாக அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில் தான், பாஜக மேலிடம் தன்னைக் கண்டுக் கொள்வதில்லை என்பதாலும், தன்னுடைய ஆதரவாளர்களுக்காகவும் பாஜகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாக அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகக் கமலாலய வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
அதற்கான முன்னோட்டமாகத்தான் தற்போது மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அண்ணாமலை பேசத் தொடங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒன்று மத்திய அமைச்சரவையில் இடம் கொடுங்கள் அல்லது மாநிலத் தலைமை பொறுப்பை கொடுங்கள், இல்லையென்றால் இப்படித்தான் அழுத்தம் கொடுப்பேன் என்பதற்காக முதல் அடியாகத்தான் அண்ணாமலையின் பதிவு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்ணாமலையின் இந்த பதிவுக்குப் பின்னால் மாணவர்கள் நலனா? மாநில பதவிக்கான தூண்டிலா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?