விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு சிக்கல்! 2ம் நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை...
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதில், தரமற்ற பொருட்கள் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொது விநியோகத் திட்ட ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அபிராமபுரத்தில் உள்ள அவரது வீடு மற்றும் பாரிமுனையில் உள்ள அலுவலகங்களில் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர். மேலும், அவருக்கு நெருக்கமான இருந்த வேப்பேரியைச் சேர்ந்த மகாவீர் இராணி மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளரும், லாட்டரி அதிபர் மார்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜூன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் ராணி வீடுகளில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் விசிகவில் இணைந்ததோடு, திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஸ்பான்சர் செய்ததாகவும் கூறப்படுகிறது.
What's Your Reaction?