தீண்டாத் திருமேனியாக அருளும் சிறுவாபுரி வரதராஜ பெருமாள்... அதிசய திருத்தல வரலாறு!
சிறுவாபுரி ஸ்ரீ ஊரக வரதராஜ பெருமாள் கோயிலில், 1008 சாளகிராமங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தீண்டாத் திருமேனியாக பெருமாள் அருள்பாலிக்கிறார். தாழம்பூ மடல் மூலம் மட்டுமே சிறப்பு வழிபாடு நடைபெறும் அபூர்வ வைணவத் திருத்தலமாக இது விளங்குகிறது.
திருமால், அலங்கரப் : பிரியன் என்று சொல் வார்கள். ஆனால், பட்டாசார்யார்களாலும் தொடமுடியாத தீண்டாத் திருமேனியராக பெருமாள் சேவைசாதிக்கும் திருத்தலம். சிறுவாபுரி. ஆம், முருகப் பெருமான் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் அதே திருத்தலம்தான். அந்த முருகன் கோயிலுக்கு வெகு அருகிலேயேதான்
இருக்கிறது இந்தப் பெருமாள் கோயில். பெருமாள் இங்கே ஸ்ரீ ஊரக வரதராஜர் என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார்.
இக்கோயிலின் தலபுராணம், ஸூச்வாஸர் என்ற முனிவருடன் தொடர்பு உடையது. அவர் இத்தலம் தங்கி தவம், யாகம் எனப் பலவும் செய்து இறைவனை வணங்கிவந்தார். அந்த சமயத்தில், கொடியவனான சிரவணாசுரன் என்பவன், அப்பகுதிக்கு வந்தான். முனிவரின் யாகத்தைத் தடுத்தான். அவரது குடிலை நாசமாக்கி அட்டூழியங்கள் செய்தான். பொறுமையாக மீண்டும் யாகத்தைத் தொடங்கினார் முனிவர். மீண்டும் தொல்லைதர வந்தான் அசுரன். அவனது கொடூரமான தோற்றத்தைக் கண்டு, முனிவரின் சீடர்கள் யாவரும் அஞ்சினர். அவனது வேகம் தாங்காமல், மரங்கள் குலுங்கின. மலைகள் நடுங்கின.
எல்லோரும் பயந்து அலற, முனிவர்களின் தலைவராக இருந்த ரிஷி மணிகருக்குக் கோபம் பொங்கியது. மந்திரங்களை உச்சரித்தபடியே ஆவேசத்துடன் கம்பீரமாக அவர் எழுந்து நிற்க, அசுரன் கொஞ்சம் அதிர்ந்துபோனான். பின்வாங்கினான். நடந்த விஷயங்களை பிருந்தாரண்யத்தில் தங்கியிருந்த கண்வ முனிவரிடம் சொன்னார், ஸூச்வாஸர். அதைக் கேட்க கண்வ முனிவர், காச்யபரிடமிருந்து தாம் கற்ற உபதேசத்தை அவருக்குச் சொல்லி, ஸ்ரீமந் நாராயணனை அர்ச்சா ரூபத்தில் வழிபடுமாறு பணித்தார்.
அதன்படி, தனது ஆஸ்ரமத்தில் யாகசாலை அமைத்தார் ஸூச்வாஸர். மணிக முனிவர் தன்னுடைய பத்தினி சந்தியாதேவியுடன் மேற்கே அமர்ந்து அவருக்குக் காவல் இருந்தார். ஸூச்வாஸர் கிழக்கில் அமர்ந்து தவம் செய்தார். காலம் நகர்ந்தது, ஸூச்வாஸரின் நாபிவரை மணல் மூடி, அதில் தர்ப்பைப் புல் முளைத்தது. அதனால் அவருக்கு 'குசநாபர்'என்ற பெயர் ஏற்பட்டது. குசநாபரின் தவத்துக்கு இரங்கிய ஸ்ரீமந் நாராயணனின் அருளால் விஸ்வகர்மா அங்கே தோன்றினார். முனிவரின் வழிபாட்டிற்காக பெரு மாளின் சிலை ஒன்றினை வடித்துக் கொடுத்தார். முனிவர் வழிபட, பூமிப்பிராட்டி சகிதராக பெருமாள் அங்கே தோன்றினார்.
குசநாபர், மணிக முனிவர் உள்ளிட்ட யாவரும் பெருமாளைத் துதித்துப் போற்ற, வரமளித்து மறைந்தார், எம்பெருமான்.
வரம்தந்த ஸ்வாமியான வரத ராஜருக்கு அங்கே கோயில் ஒன்று எழுந்தது. மூனிவர்கள் மீண்டும் யாகம் தொடங்கினர். அதற்காகவே காத்திருந்தவன்போல் சிரவணாசுரன் மீண்டும் அங்கே வர, முனிவர்கள் பெருமாளிடம் சரணடைந்தனர். அடுத்தநொடி அங்கே அர்ச்சா மூர்த்தமாக இருந்த பெருமாளின் கரத்தில் இருந்த சுதர்சன சக்கரத்தில் இருந்து பெரும் நெருப்பு தோன்றி, அசுரர்கள் அனைவரையும் அழித்து ஒழித்தது. முனிவர்கள் மகிழ்வுடன் யாகங்கள் நடத்தியும் பெருமாளை ஆராதித்தும் மகிழ்ந்தனர்.
காலம் ஓடியது.முற்காலப் பல்லவர் காலத்தில் அந்தக் காட்டிற்கு நடுவே குடியிருப்புகள் தோன்றின. ஆனாலும் அங்கே அடிக்கடி கலகம், திடீர் திடீரென குடியிருப்புகள் தீக்கிரையாவது, மிகப் பெரிய வண்டுகள், குளவிகள் படையெடுத்துப் பறந்து வந்து மனிதர்களையும் விலங்குகளையும் தாக்குவது என ஒரே களேபரமாகவே இருந்தது. அதனால் நிம்மதியின்றி வாடிய மக்கள், ஒரு தபஸ்வியை சரணடைந்து, தங்களைக் காக்க வேண்டினர். அவரும் தேவராஜஸ்வாமியை வணங்கி தியானத்தில் ஆழ்ந்தார். தியானத்தில், விஷ்ணுவின் மாயா சக்தியான வைஷ்ணவி தேவி, விந்திய மலையில் இருந்து இறங்கி இப்பகுதிக்கு வந்தாள். பெருமாளின் வலது கண்ணில் இருந்து தோன்றிய கோடி சூரியப் பிரகாச ஒளி, வைஷ்ணவி தேவியின் இதயத்தில் புகுந்தது. அவள், பெருமாளை தரிசித்தவண்ணம் நின்றபடியே, வண்டுகளாகத் திரிந்து நாசம் ஏற்படுத்திய அரக்கர்களைத் தன் காலால் நசுக்கி அழித்தாள். பின் அங்கேயே காவலாகக் கோயில் கொண்டாள்.
தான் கண்ட காட்சியை அனைவரிடமும் சொன்ன தபஸ்வி, அவர்கள் பயத்தைப் போக் கினார்.
அதையடுத்து, இங்கே வைஷ்ணவிக்கும் சன்னதி அமைக்கப்பட்ட, அசுரர்களின் அட்டஹாசம் முற்றிலும் மறைந்து, நிம்மதி நிலவத்தொடங்கியது. கோயிலுக்குப் பின்புறம், வரதராஜரை நோக்கி கோயில் கொண்டிருக்கிறாள், ஸ்ரீவைஷ்ணவி. வைகானச ஆகம் பூஜை நடைபெறும் இந்தக் கோயில் தூண்களில் அனுமன் சிற்பங்கள் அதிகம் இருப்பது, பல்லவர் காலக் கட்டடக் கலையை பறைசாற்றுகிறது. ஆரண்ய நதியும் கொசஸ்தலை நதியும் இருபக்கம் செல்லும் வழியில் சிறுவாபுரி என்ற சிறிய கிராமத்தில் வால்மீகி முனிவர் தமது ஆசிரமத்தை அமைத்து இருந்தார்.
இங்கேதான் ராமபிரானின் மகன்களான லவனும் குசனும் வில்வித்தை பயிற்சி செய்தனராம். சிறுவர்கள் அம்பு விட்டுப் பயிற்சி செய்ததால், சிறுவர் அம்பு எய்த புரி என வழங்கப்பட்டு, அதுவே மருவி சிறுவாபுரி என மருவியதாகச் சொல்லப்படுகிறது. மூலவரான வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் மேற்கு நோக்கி சேவை சாதிக்கிறார்; அவர்களைப் பார்த்தவாறு பெரிய திருவடியான கருடன் சிறிய சிலா ரூபத்தில் உள்ளார். மற்றொரு சன்னதியில், விஷ்வக் சேனருடன் லட்சுமியும் நாராயணனும் எழுந்தருளியுள்ளனர். இந்தக் கருவறையில் விஷ்ணு (நாராயணன்) அமர்ந்த திருக் கோலத்தில் லட்சுமி நாராயணராக தரிசனம் தருகிறார்.
இக்கோயிலில் மரகதத்தால் செய்யப்பட்ட ஸ்ரீநிவாச பெருமாள் சன்னதி உள்ளது. அவரும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார்.
உற்சவத் திருமேனிகள் அனைத்தும் வரதராஜ பெருமாள் சன்னதியில் வைக்கப் பட்டுள்ளன. அருகில், ஆழ்வார்களின் சிற்பங்களுடன், ருக்மிணியுடன் கூடிய கிருஷ்ணரின் மனதைக் கவரும் திருவுருவமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது கோயில் பிராகாரத்தில் அனுமன் மற்றும் ஆண்டாள் சன்னதிகள் அமைந்துள்ளன, பெருந்தேவி தாயாருக்குத் தனிச் சன்னதி உள்ளது. தீண்டாத் திருமேனியராக இங்கே அருளும் பெருமாளின் கீரிடம் முதல் திருவடி வரை 1008 சாளகிராமம், நவரத்தினம், தங்கம், வெள்ளியுடன் பெருமாளின் திருவடியில் செப்புத் தகட்டால் செய்த யந்திரத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பெருமாளின் திருமேனிக்கு, பட்டாசார்யார்கள் அபிஷேகம், அலங்காரம், ஆரதனை என எதுவும் செய்வது கிடையாது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றிய பிறகு, தேவதாரு மரப்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட தைலம், சந்தனத் தைலம், சாம்பிராணி தைலம், மூலிகைகள் கலந்த கலவையை, தாழம்பூ மடலைத் தூரிகையாக்கி அதன் மூலம் பெருமாளின் திருமேனியில் தடவிவிடுவார். இந்த சமயத்தில் தீண்டாத் திருமேனி பெருமாள் உடல் அதிக சூட்டில் இருப்பதால் அவருக்கு ததியோதனம் (தயிர்சாதம்) தளிகை படைக்கப்படுகிறது.
தைலக்காப்பு சாத்தப்பட்ட பிறகு, வைகுண்ட ஏகாதசிக்கு முன் வரும் தசமி வரை திரை போட்டு மறைத்து எம்பெருமான் திருமுகம் மட்டும் பக்தர்கள் சேவிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தசமி அன்று மீண்டும் தாழம்பூ மடல் தூரிகை மூலமே வஸ்திரத்தினை தீண்டாத் திருமேனி பெருமாளுக்கு சாத்துவார்
எங்கே இருக்கு? சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் ரெட் ஹில்ஸை அடுத்துள்ள சிறுவாபுரியில் முருகன் கோயிலுக்கு அருகே உள்ளது.
எப்போதாவது ஒரு முறை ஒரே ஒரு துளசி இலையை மட்டும் தாழம்பூ மடலில் வைத்து எம்பெருமான் திருமார்பில் அர்ச்சகர் எட்ட நின்று சாத்திவிடுகிறார். துளசி இலை பெருமாளின் மார்ப்பில் சென்று ஒட்டிக் கொள்கிறது.
What's Your Reaction?

